யாழ் மத்திய தபாலக முன்றலில் அஞ்சல்துறை தொழிலாளர்கள் போராட்டம்!

Friday, June 22nd, 2018

அஞ்சல் துறை ஊழியர்களின் தொடர் போராட்டத்தின் ஒரு அங்கமாக  யாழ்ப்பாணம் மத்திய தபாலகம் முன்றலில் யாழ் மாவட்ட அஞ்சல் துறை ஊழியர்கள் ஒன்றுதிரண்டு போராட்டம் ஒன்றை முன்னெடுத்தள்ளனர்.

இதில் யாழ் மாவட்டத்திலுள்ள அநேக தபலகங்களின் உழியர்கள் கலந்து பல சுலோகங்களை தாங்கியவாறு தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 11ஆம் திகதிமுதல் இலங்கை தபால் சேவை ஊழியர்களால் மேற்கொண்டுவரும் வேலைநிறுத்தப் போராட்டத்தினால் தபால் சேவைபெரும் பாதிப்புக்குள்ளாகியதுடன் பொதுமக்களும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர்.

நாளொன்றுக்கு சுமார் 17 கோடிரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதோடு 15 இலட்சத்தக்கும்  மேற்பட்ட தபால்கள் மத்தியதபால் பரிமாற்ற நிலையத்தில் தேங்கிக் கிடக்கின்றன.

விண்ணப்பபடிவங்கள், வேலைவாய்ப்புக்களுக்கான நியமன கடிதங்கள், சர்வதேச நாடுகளில் இருந்துதபால் மூலமாக அனுப்பிவைக்கப்படும் பொதிகள், சேவைகள், விவசாயிகள் மற்றும் முதியோர்களுக்கான கொடுப்பனவுகளை பெற்றுக்கொள்வது போன்ற சேவைகள் முடக்கப்பட்டுள்ளன.

இலங்கைதபால் சேவை ஊழியர்கள் 2006 ஆம் ஆண்டு சேவை வழங்கும் திணைக்களத்துக்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் அடிப்படையில் ஆட்சேர்க்கும்

நடைமுறையிலுள்ள குளறுபடியை மாற்றக்கோரியும், தமக்கான சம்பள உயர்வு கோரிக்கை உட்பட பல்வேறு கோரிக்கைளை முன்வைத்து தபால் சேவையை சேர்ந்த 23 தொழிற்சங்கங்கள் கூட்டாக இப் போராட்டத்தைமுன்னெடுத்துள்ளன.

11-06-2018 ஆம் திகதிமுதல் வேலைநிறுத்தம் ஆரம்பிக்கபட்டதன் பின்னர் மத்தியதபால் பரிவர்த்தனை நிலையத்திற்குள் எங்கிருந்தும் தபால் பொதிகள் கொண்டுவரப்படவில்லை என்றும் அன்றைய தினத்திலிருந்து தபால் பொதிகள் அங்கு தேங்கிக்கடப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

வேலைநிறுத்தம் ஆரம்பிக்கப்பட்ட தினத்தன்று இருந்த அதேதபால் பொதிகளே இன்னமும் அங்கு தேங்கிக் கிடக்கின்றன. அத்துடன் வெளிநாடுகளிலிருந்து இலங்கைக்கு வந்துசேர்ந்த பொதிகள் அனைத்தும் இன்னமும் கட்டுநாயக்கா விமானநிலையத்திலேயே கிடப்பதாகவும் கூறப்படுகிறது.

நாளொன்றுக்கு சராசரி கிடைத்த 150 மில்லியன் ரூபா வருமானம் சில நாட்களாக 180 மில்லியன் ரூபாய்கள் வரை அதிகரித்திருந்ததாகவும், தற்போது தொழிற் சங்கங்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்பட்டுள்ள நட்டம் பற்றி கணக்கிடப்பட முடியவில்லையென தெரிவிக்கப்படுகிறது.

கடந்தவருடம் கடுகதி தபால் சேவை மூலம் வருடாந்தம் 90 மில்லியன் ரூபாவை தபால் திணைக்களம் பெற்றுவந்ததாகவும் தற்போது ஏற்பட்டுள்ள வேலை நிறுத்தப் போராட்டத்தால் தனியார் நிறுவனங்கள் இதனை நிரப்பமுன்வந்துள்ளன. இந்த இடத்தை மீண்டும் நிரப்புவது என்பது இலகுவான விடயமல்ல என்று தபால் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

இது இவ்வாறிருக்க வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தபால் தொழிற் சங்கத்தினருக்கும், தபால் மா அதிபருக்கும் இடையிலான பேச்சுவார்த்தை இடம்பெற உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Related posts: