யாழ். போதனா வைத்தியசாலைக்கு மிக விரைவில் எம்.ஆர்.ஐ. ஸ்கானர்!

Thursday, December 21st, 2017

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு எம்.ஆர்.ஐ. ஸ்கானரும், கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சி.ரி. ஸ்கானரும் மிக விரைவில் வழங்குவதற்கு சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன உறுதியளித்துள்ளார்.

வட மாகாண மருத்துவர் மன்றத்திற்கும் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்னவுக்குமிடையே ஞாயிற்றுக்கிழமை பத்தர முல்லையில் நடைபெற்ற விசேட கலந்துரையாடலின் போது அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

வடக்கின் சுகாதார நிலைமைகள் தொடர்பாக கடந்த 2 வருடங்களாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவரும் வடமாகாண மருத்துவர் மன்றம் இது தொடர்பாக அமைச்சர் ராஜிதவுடனும் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடனும் இந்தக் கலந்துரையாடலை நடத்தியிருந்தது.

இங்கு பல்வேறு விடயங்கள் தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டு தீர்வு காணப்பட்டதுடன், வடக்கிற்கு மிக அத்தியாவசியமாகவுள்ள எம்.ஆர்.ஐ. ஸ்கானர் மற்றும் சி.ரி. ஸ்கானர்களை பெறுவது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

இதன்போது மிக விரைவில் 10 எம்.ஆர்.ஐ. மற்றும் சி.ரி. ஸ்கானர்கள் இலங்கைக்கு வரவுள்ளதாகவும் அதில் எம்.ஆர்.ஐ. ஸ்கானர் யாழ் போதனா வைத்தியசாலைக்கும் சி.ரி. ஸ்கானர் கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கும் வழங்கப்படுமென அமைச்சர் உறுதியளித்தார்.

வடக்கில் இதுவரை எந்தவொரு அரச வைத்தியசாலைகளிலும் எம்.ஆர்.ஐ. ஸ்கானர் இல்லாத நிலையில், யாழ் போதனா வைத்தியசாலைக்கு முதற் தடவையாக எம்.ஆர்.ஐ. ஸ்கானர் வழங்கப்படவுள்ளது. இதன்மூலம், வடபகுதி நோயாளர்கள் கொழும்புக்கு மாற்றப்பட வேண்டிய தேவை இல்லையெனவும் வீணான காலதாமதத்தை தவிர்க்க முடியுமெனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதேவேளை, கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்கு சி.ரி.ஸ்கானர் வழங்கப்படுவது இதுவே முதன்முறையாகும். இதன் மூலம் அந்த மாவட்ட நோயாளர்கள் யாழ். மாவட்டத்திற்கும் வெளிமாவட்டத்திற்கும் அனுப்பப்பட வேண்டிய தேவை இல்லாது போகுமெனவும் இங்கு சுட்டிக்காட்டப்பட்டது.

Related posts: