யாழ். போதனா மருத்துவமனை சி.ரி.ஸ்கானர் பழுது! : கொடையாளிகள் அன்பளிப்புச் செய்யுங்கள் – மருத்துவமனைப் பணிப்பாளர் அவசர கோரிக்கை!

Saturday, January 19th, 2019

யாழ் போதனா மருத்துவமனையில் உள்ள சி.ரி.ஸ்கானர் பழுதடைந்துள்ளது. அதனால் நோயாளர்கள் அவதிப்படுகின்றனர். அதனைப் பெற்றுத்தர கொடையாளிகள் யாராவது முன்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறோம். இந்த விடயத்தில் சுகாதார அமைச்சு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவசர கோரிக்கையை விடுக்கிறோம். என்று யாழ் போதனா மருத்துவமனைப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். குறித்த இயந்திரம் பழுதடைந்துள்ளதால் நோயாளர்களுக்கு சி.ரி.ஸ்கான் செய்வதில் சிரமத்தை எதிர்நோக்குவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த 8 வருடங்களாகப் பாவிக்கப்பட்ட சி.ரி.ஸ்கானர் இயந்திரத்தில் ரியூப் என்று அழைக்கப்படும் ஒரு வகை குழாய் பழுதடைந்துள்ளதால் நோயாளர்களுக்கு உரிய ஸ்கான் செய்வதற்கு வவுனியா மற்றும் ஏனைய மருத்துவமனைகளை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த ஸ்கானருடைய பகுதியைத் திருத்த 3 வாரங்களுக்கு மேல் நீடிக்கும். இதனால் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகிறோம் என்றும் பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

புதிய சி.ரி.ஸ்கானர் பெற்றுக்கொள்வதற்கான வழிகள் தற்போது மருத்துவமனை நிர்வாகத்தினரிடம் இல்லாத காரணத்தால் நோயாளிகளை ஏனைய மருத்துவமனைகளுக்கு அனுப்பி சி.ரி.ஸ்கான் சேவைகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது.

புதிய சி.ரி.ஸ்கானர் வழங்குவதாக சுகாதார அமைச்சு உறுதியளித்திருந்தாலும் அதனை உடனடியாக வழங்குவதாக இல்லை. இந்த சி.ரி.ஸ்கானரைக் கொள்வனவு செய்ய 75 மில்லியன் தொடக்கம் 100 மில்லியன் ரூபா வரை தேவை. பன்னாட்டு அன்பளிப்பாளர்கள் யாராவது உதவி செய்தால் யாழ் போதனா மருத்துவமனைக்கு புதிய சி.ரி.ஸ்கானர் ஒன்றைக் கொள்வனவு செய்ய முடியும்.

தனியார் மருத்துவமனைகளில் நோயாளி ஒருவர் சி.ரி.ஸ்கான் செய்வதற்குச் சுமார் 7 ஆயிரம் ரூபா தொடக்கம் 15 ஆயிரம் ரூபா வரையில் தேவைப்படும்.

நோயாளிகள் பணம் செலவழிக்க வேண்டிய நிலையைத் தவிர்க்க ஏனைய மருத்துவமனைகளை நாடவேண்டியுள்ளது. எனவே அரசு உரிய நேரத்தில் சி.ரி.ஸ்கானரை வழங்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பணிப்பாளர் சத்தியமூர்த்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Related posts: