யாழ் பேருந்து நிலைய காவலாளிக்கு கத்திக்குத்து: யாழ் பஸ்நிலையத்தில் பதற்றம்!

Wednesday, November 14th, 2018

யாழ். மத்திய பஸ் தரிப்பிடத்தில் நின்ற பாதுகாப்பு உத்தியோகத்தரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியதால், பஸ் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டதுடன், கத்தியால்குத்திய நபரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

யாழ். மத்திய பஸ் நிலையத்தில் இன்று (14) மதியம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கத்திக்குத்துக்கு இலக்காகிய சுரேஸ் என்ற பாதுகாப்பு உத்தியோகத்தர் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது,

புலோலி பகுதியைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் யாழ்.மத்திய பஸ் நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். இதன்போது, பஸ் நிலைய பாதுகாப்பு உத்தியோகத்தருக்கும் இளைஞருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது. அந்த வாய்த்தர்க்கத்தின் போது, பஸ் நிலையத்திற்கு வருகை தந்த அந்த இளைஞர், தனது சட்டைப் பைக்குள் இருந்து கத்தி எடுத்து பாதுகாப்புக் கடமையில் இருந்த பாதுகாப்பு உத்தியோகத்தரின் வயிற்றில் குத்தியதுடன், கையிலும் வெட்டியுள்ளார்.

பஸ் நிலையத்தில் நின்ற பொதுமக்கள் ஒன்று கூடவும், அங்கிருந்து தப்பிச் சென்று பஸ் நிலையத்திற்கு அருகாமையில் மறைந்து நின்ற போது, அந்தப்பகுதியில் நின்ற பொதுமக்கள் பஸ் நிலைய நிர்வாகத்தினரிடம் தெரிவித்ததை தொடர்ந்து, கத்தியால் குத்திய இளைஞர், மடக்கிப் பிடிக்கப்பட்டு, நையப்பபுடையப்பட்டு யாழ்ப்பாணம் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

யாழ்ப்பாணம் பொலிஸார் அவரைக் கைதுசெய்ததுடன், சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். கைதுசெய்யப்பட்ட நபரை யாழ்.நீதிமன்றில் ஆஜர்ப்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருகின்றதாகவும் யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

Related posts: