யாழ் பஸ் நிலையத்தில் மயக்கமடைந்த குடும்பஸ்தரை வைத்தியசாலை கொண்டு செல்லாததால் மரணம்!

Friday, January 11th, 2019

மயக்கமடைந்த குடும்பஸ்தர் ஒருவரை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாது மனிதாபிமானமற்ற முறையில் பொதுமக்கள் வேடிக்கை பார்த்ததால் அதிக நேரமாக வெயிலில் கிடந்த குறித்த நபர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் ஒன்று யாழ் நகர்ப் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குருநகர் கடற்கரை வீதியை சேர்ந்த விக்ரர் வின்ரன் (வயது50) என்ற 4 பிள்ளைகளின் தந்தையே மேற்படி உயிரிழ்தவராவார்.

இவர் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் முல்லைத்தீவில் உள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து நேற்று முன்தினம் நண்பகல் வீடு திரும்பியுள்ளார்.

பேருந்தில் யாழ் நகர் நோக்கி வந்த குறித்த நபர் யாழ் பேருந்து தரிப்பிடத்தில் இறங்கிய உடனே மயங்கி விழுந்துள்ளார்.

மயங்கி விழுந்த நபரை யாரும் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லாமல் பார்த்துக்கொண்டு நின்றுள்ளனர்.

அரை மணி நேரத்துக்குப் பின்னர் குறித்த நபருடைய உறவினர்கள் அந்த இடத்துக்கு வந்து அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

அங்கு அவரை பரிசோதித்த வைத்தியர்கள் குறித்த நபர் உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.

இந்த மரண விசாரணையை யாழ் போதனா வைத்தியசாலையின் திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டிருந்தார்.

சடலம் பிரேத பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

Related posts: