யாழ். பல்கலை மோதல் : மூவரடங்கிய குழு விசாரணை!

Thursday, July 21st, 2016

யாழ். பல்கலைக்கழகத்தில்  மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் சம்பவம் குறித்து தற்போது வரையில் அவதானிக்கப்பட்ட விடயங்களை மேலும் விசாரணை செய்து  அவ்வாறான சம்பவம் இடம்பெறுவதற்குரிய காரணம் மற்றும் பெறுபேறுகளை அடையாளம் கண்டுகொள்வதற்காக மூவரடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டிருப்பதாக உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

அந்தக்   குழுவின் பரிந்துரைக்கமையவே  அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

யாழ். பல்கலைக்கழக பொறியியல் பீட சபை உறுப்பினரும் இலங்கை மின்சார சபையின் பிரதி பணிப்பாளருமான டி.கே.பீ.யூ. குணதிலக  யாழ். பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர். கே. முகுந்தன் மற்றும் யாழ். பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டாக்டர். பீ.எஸ்.நவரட்ன ஆகியோரே விசாரணைக் குழுவின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (21) எதிர்க்கட்சியின் பிரதம கொறடாவும் ஜே.வி.பி. தலைவருமான அநுரகுமார திசாநாயக்க எம்.பி. 23இன் கீழ் 2 ஆம் இலக்க நிலையியற் கட்டளையின் கீழ் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே உயர்கல்வி அமைச்சர் கிரியெல்ல மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

யாழ்.பல்கலைக்கழக மோதல் சம்பவம் தொடர்பான விசாரணையானது அப்பபிரதேசத்திற்குப் பொறுப்பான கோப்பாய் பொலிஸாரினாலும் யாழ். பல்கலைக்கழகத்தின் அதிகாரிகளினாலும் மேற்கொள்ளப்பட்டுகின்றது.  அச்சம்பவத்துடன் தொடர்புடைய  மாணவர்கள் தனித்தனியாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன்  அவர்கள் தொடர்பில் ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கு யாழ். பல்கலைக்கழகத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுவதாக பொலிஸாரின் விசாரணையின் மூலம் வெளிப்பட்டுள்ள கனகேஸ்வரன் சிசிதரன் என்ற மாணவன் கோப்பாய் பொலிஸாரினால் கைதுசெய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சட்டத்தரணி ஒருவர் ஊடாக நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இம்மோதல் சம்பவத்துடன் அவதானிக்கப்பட்ட விடயங்களை மேலும் விசாரித்து அந்த சம்பவத்துக்குரிய காரணம் மற்றும்  பெறுபேறுகளை அடையாளம் காண்பதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவுக்கு  விசாரணைகளை மேற்கொள்ள போதுமான கால அவகாசமொன்றை வழங்க வேண்டியுள்ளது.  அந்த குழு தற்போது ஆரம்பகட்ட விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த விசாரணை மூலம் அக்குழுவினால் முன்வைக்கப்படும் பரிந்துரைகளுக்கு அமைய அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் உப தலைவர் மற்றும் ; செயலாளர் ஆகியோர் இன்று யாழ். பல்கலைக்கழக வளாகத்திற்கு சென்று கல்வி மற்றும் கல்விசாரா ஊழியர்களையும், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்து மாணவர் அமைப்புகளுடனும் பேச்சுக்களை நடத்தி தற்போதைய நிலைமைகள் பற்றி எனக்கு அறிக்கை சமர்ப்பிக்கவேண்டும் என  ஆலோசனை வழங்கியுள்ளேன்.

மாணவர்களால் ஏற்பாடு செய்யப்படும் சகல நடவடிக்கைகளும் பல்கலைக்கழகத்தின் அனைத்து மாணவர்களினதும் பல்கலைக்கழக நிர்வாகத்தினதும் இணக்கப்பாட்டுடன் மேற்கொள்ளப்படுவதற்கும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் உரிய ஆலோசனைகள் வழங்கப்படவுள்ளன என்றார்.

Related posts: