யாழ்.பல்கலை மோதல் சம்பவம்: நிர்வாகத்திடம் மாணவர்களின் விபரம் கோரல் !
Wednesday, August 3rd, 2016
யாழ்.பல்கலைக்கழகத்தில் அண்மையில் இரு மாணவர் குழுக்களுக்கிடையே இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் கோப்பாய்ப் பொலிஸார் மேலும் சில மாணவர்களின் பெயர் விபரங்களைத் திரட்டியுள்ளதாகத் தெரிய வருகிறது. இதனடிப்படையில் சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் தமிழ் மாணவர்கள் சிலருடைய பெயர் விபரங்களை யாழ்.பல்கலைக்கழக நிர்வாகத்திடம் பொலிஸார் கோரிப் பெற்றுக்கொ ண்டுள்ளதாகவும் தெரியவருகிறது.
கடந்த மாதம்- 16ஆம் திகதி யாழ். பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் புதுமுக மாணவர்கள் வரவேற்பு நிகழ்ச்சியொன்றின் போது இரு மாணவர் குழுக்களுக்களுக்கிடையே மோதல் இடம்பெற்றது. குறித்த மோதல் சம்பவத்தினையடுத்துக் கொழும்பு தேசிய வைத்திய சாலையில் சிகிச்சைக்காகஅனுமதிக்கப்பட்டிருந்த சிங்கள மாணவரொருவர் தன்னை மூன்று தமிழ் மாணவர்கள் இணைந்து தாக்கியதாகப் பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியிருந்தார். இதனடிப்படையில் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவரைக் கைது செய்வதற்குப் பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டிருந்த நிலையில் அவர் யாழ்.நீதவான் நீதிமன்றத்தில் தனது சட்டத்தரணியூடாகச் சரணடைந்த நிலையில் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
இதனையடுத்து நான்கு சிங்கள மாணவர்கள் தன்னைத் தாக்கியதாக யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் கோப்பாய்ப் பொலிஸ் நிலையத்தில்முறைப்பாடு பதிவு செய்தார். இந்த நிலையில் இரு மாணவர்கள் குழுக்களாலும் பரஸ்பரம் குற்றஞ்சாட்டப்பட்ட நான்கு தமிழ், நான்கு சிங்கள மாணவர்கள் அடங்கலாக எட்டுப் பேருக்கு எதிராக யாழ். நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு விசாரணைக்காகத் தமிழ் மாணவர்களை இம்மாதம் 25 ஆம் திகதி வியாழக்கிழமையும், சிங்கள மாணவர்களை எதிர்வரும் செம்டெம்பர் மாதம் முதலாம் திகதியும் மன்றில் ஆஜராகுமாறு யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|