யாழ்.பல்கலையில் சிரேஸ்ட மாணவர்களின் அராஜகம் : 25 மாணவர்கள் பரிதாபநிலையில்!
Friday, June 22nd, 2018
வவுனியாவில் அமைந்துள்ள யாழ்.பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர்கள் 25 பேர் சிரேஸ்ட மாணவர்களின் பகிடிவதை கொடுமை காரணமாக மொட்டையடித்துள்ளனர்.
வவுனியா குருமன்காடு சந்தியில் அமைந்துள்ள சிகையலங்கார நிலையம் ஒன்றில் இந்த 25 மாணவர்களும் மொட்டையடிக்கச் சென்றுள்ளனர். ஒருவருக்கு மொட்டை அடிப்பதற்கு 500 ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் அந்த மாணவர்கள் தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை மொட்டையடிக்காமல் பல்கலைக்கழகம் சென்றால் கனிஸ்ட மாணவிகளின் முன்னால் அரை நிர்வாணமாக நிறுத்தி சிரேஸ்ட மாணவர்கள் அடிப்பார்கள் என தெரிவித்த நிலையில் குறித்த சிகையலங்கார நிலையத்தின் உரிமையாளர் மனிதாபிமான அடிப்படையில் 50 ரூபாவிற்கு மொட்டையடித்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து கருத்து வெளியிட்டுள்ள வவுனியா பிரஜைகள் சிலர், யாழ் பல்கலைக்கழகத்தின் வவுனியா வளாகத்தின் சிரேஸ்ட மாணவர்கள் பகிடிவதை என்ற பெயரில் மனிதாபிமானமற்ற உரிமை மீறல் செயல்பாட்டில் ஈடுபட்டுள்ளார்கள்.
கல்வி கற்பதற்காக பல்கலைக்கழகம் வரும் கனிஸ்ட மாணவர்களை பகிடிவதை என்ற பெயரில் துன்புறுத்துவதை ஒரு போதும் ஏற்றுக்கொள்ள முடியாது. இது போன்ற நடவடிக்கைகள் பல்கலைக்கழகத்தின் மீது வெறுப்புணர்வையே ஏற்படுத்தும் எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பகிடி வதை குறித்து கவனத்தில் கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
Related posts: