யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் கொலை: சிங்கள மொழி சாட்சி பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு உத்தரவு!
Saturday, May 25th, 2019யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கின் சிங்கள மொழியில் இருந்த காவல்துறை அதிகாரியின் சாட்சியின் பிரதியை தமிழுக்கு மொழிபெயர்த்து மன்றில் சமர்ப்பிக்குமாறு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, நீதவான் பீற்றர் போல் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
பல்கலைக்கழக மாணவர்கள் வி.சுலக்சன், ந.கஜன் ஆகியோர் காங்கேசன்துறை வீதி கொக்குவில் குளப்பிட்டியில் வைத்து கடந்த 2016 ஆம் ஆண்டு ஒக்ரோபர் 20 ஆம் திகதி நள்ளிரவு காவல்துறையினரின் துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டனர்.
சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்ட விசாரணைகளில் யாழ்ப்பாணம் காவல்துறை நிலையத்தில் பணியாற்றிய தமிழ் காவல்துறை உத்தியோகத்தர் உட்பட 5 காவல்துறையினர் விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
அவர்கள், ஐந்து பேரும் 11 மாதங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டதுடன், மீண்டும் காவல்துறை சேவையில் இணைக்கப்பட்டனர்.
வழக்கில் சந்தேகநபர்களாக குறிப்பிடப்பட்டிருந்த 5 பேரில், இரண்டாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது சந்தேகநபர்கள் ஆகியோர் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டு அரச சாட்சிகளாக மாற்றப்பட்டனர்.
மேலும் கடமைக்கு பொறுப்பாகவிருந்தவரான முதலாவது சந்தேகத்துக்குரியவர் மற்றும் துப்பாக்கிச்சூடு நடத்தியவரான மூன்றாவது சந்தேகத்துக்குரியவர் ஆகிய இருவருக்கும் கொலைக் குற்றச்சாட்டின் கீழ் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் நீதவான் நீதிமன்றில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தனர்.
இந்த நிலையில், குறித்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சந்தேகத்துக்குரிய இருவரும் மன்றில் முன்னிலையாகினர். வழக்குத் தொடுனர் தரப்பில் காவல்துறை உத்தியோகத்தர் மன்றில் முற்படுத்தப்பட்டார். அவரது பதிவுப் புத்தகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட பிரதி மன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.அந்தப் பிரதி தனிச் சிங்கள மொழியில் காணப்பட்டது.
இந்த நிலையில், சாட்சியின் பிரித்தெடுக்கப்பட்ட பிரதியின் தமிழ்மொழி பெயர்ப்பை மன்றில் சமர்ப்பிக்க யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதவான் ஏ.எஸ்.பீற்றர் போல் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், குறித்த வழக்கை குறைந்த காலப்பகுதியான எதிர்வரும் 13ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
Related posts:
|
|