யாழ்.பல்கலைக்கழக கற்கை நெறிகளின் தெரிவுப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிப்பு!

Friday, July 9th, 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் கலைமாணி மற்றும் உடற்கல்வி விஞ்ஞானமாணி ஆகிய கற்கை நெறிகளுக்காக 2020/21 ஆம் கல்வி ஆண்டில் பயில்வதற்காக விண்ணப்பித்த மாணவர்களுக்கான நுண்ணறிவுப் பரீட்சைகளை அடுத்த வாரம்முதல் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய கலைமாணி தெரிவுக்கான நுண்ணறிவுப் பரீட்சை எதிர்வரும் 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமையும், உடற்கல்வி விஞ்ஞானமாணி தெரிவுக்கான நுண்ணறிவுப் பரீட்சை எதிர்வரும் 16 ஆம் திகதி வெள்ளிக்கிழமையும் நடத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ளது.

கலைமாணி கற்கை நெறிக்காக விண்ணப்பித்த மாணவர்களில் ஆயிரத்து 590 பேர் தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 360 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை. அத்துடன் உடற்கல்வி விஞ்ஞானமாணி கற்கை நெறிக்குவிண்ணப்பித்த மாணவர்களில் 417 பேர் தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளனர். இவர்களில் 49 பேர் விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுநேரம் தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளவர்களின் விபரங்களை http://www.jfn.ac.lk/ என்ற இணையத்தள முகவரியில் பார்வையிட முடியும் எனவும் தெரிவுப் பரீட்சைக்குத் தகுதி பெற்று, விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தத் தவறியவர்கள், தங்களின் விண்ணப்பக் கட்டணம் செலுத்தியமைக்கான வங்கிச் சிட்டையை மின்னஞ்சல் மூலமாக அனுமதிகள் கிளைக்கு அனுப்பி வைக்குமாறும், கட்டணம் செலுத்தியமையை உறுதிப்படுத்தத் தவறுபவர்களுக்குப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அனுப்பப்பட மாட்டாது எனவும் பல்கலைக்கழகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: