யாழ் நீதிமன்றில் ஹெரோயினை கைமாற்றியவர் வசமாக சிக்கினார்!

Sunday, December 9th, 2018

யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற திறந்த மன்றில் கைதி ஒருவருக்கு ஹெரோயின் போதைப்பொருளைக் கைமாற்றிய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று முற்பகல் இடம்பெற்றதாகவும் அவர் தற்போது யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் கொள்ளைச் சம்பவம் தொடர்பான விசாரணை இடம்பெற்றது. அதில் சிறைக்கைதி ஒருவர் முற்படுத்தப்பட்டார். அந்த வழக்கில் மற்றொரு சந்தேகநபரும் மன்றில் முன்னிலையானார். அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

வழக்கு முடிந்தவுடன் வழக்கின் எதிரிக் கூண்டிலிருந்த கைதியிடம் மற்றைய சந்தேனநபர் சிறிய பொதி ஒன்றை கைமாற்றிக்கொண்டதை சிறைச்சாலை உத்தியோகத்தர் கண்டுள்ளார். அவர் அதனைத் தடுக்க முற்பட்டபோது சரையை கொண்டுவந்தவர் எதிரிக் கூண்டுக்குள் போட்டுள்ளார்.

விரைந்து செயற்பட்ட சிறைச்சாலை உத்தியோகத்தர் சம்பவம் தொடர்பில் நீதிவானின் கவனத்துக்குக் கொண்டு வந்தார். நீதிமன்ற பொலிஸ் உத்தியோகத்தர் பொதியை ஆராய்ந்த போது அதற்குள் ஹெரோயின் போதைப்பொருள் இருந்தமை கண்டறியப்பட்டது.

ஹெரோயினைக் கொண்டு வந்தவர் கைது செய்யப்பட்டு மன்றில் விசாரணைக்கு உட்படுத்தி யாழ் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

Related posts: