யாழ் குடாநாட்டு வைத்தியசாலைகளில் அனைத்து வகை குருதிக்கும் தட்டுப்பாடு – கொடையாளர்களிடம் அவசர அழைப்பு விடுக்கிறார் வைத்தியர் மயூரன்!

Wednesday, October 14th, 2020

நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையால் யாழ்.குடாநாட்டு வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளில் இரத்த வகைகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகத் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பொறுப்பதிகாரி வைத்திய கலாநிதி டாக்டர் ம.பிரதீபன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் சுகாதார சிக்கல்கள் காரணமாக ஏற்கனவே ஒழுங்கமைக்கப்பட்ட நடமாடும் இரத்ததான முகாம்கள் பிற்போடப்பட்டமையே தற்போதைய இரத்த தட்டுப்பாட்டிற்கான காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

குறித்த நிலைமையை கருத்திற் கொண்டு தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலை, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை, மற்றும் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளின் இரத்த வங்கிகளுக்கு குருதிக் கொடையாளர்கள் நேரடியாக வருகை தந்து இரத்ததானம் வழங்க முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தினமும் காலை 8 மணி முதல் மாலை 4 மணி வரை தற்போது நடைமுறையிலுள்ள கொரோனா கால சுகாதார நடைமுறைகளுக்கமைய குருதிக் கொடையாளர்கள் இரத்ததானம் வழங்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலைமையைக் கருத்திற் கொண்டு இரத்ததான முகாம்களின் ஒழுங்கமைப்பாளர்கள் குருதிக் கொடையாளர்களை ஊக்குவிக்க முன்வர வேண்டும். மேலதிக விபரங்களிற்கு 0772988917 எனும் தொலைபேசி இலக்கத்திற்குத் தொடர்பு கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: