யாழ் குடாநாட்டில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிப்பு : ஒருவர் உயிரிழப்பு – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் !

Sunday, December 2nd, 2018

யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் இதுவரையான காலப்பகுதியில் 15 பேர் எலிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் ஒருவர் பரிதாபமாக உயரிழந்துள்ளார் என யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் எஸ்.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.

எலிக்காய்ச்சல் என்பது விலங்கு வழி நோயாகும். இது மனிதர்கள் உட்பட பாலூட்டிகள், பறவைகள் போன்றவற்றையும் பாதிக்கின்றது. இந்தத் தொற்று பொதுவாக விலங்கு சிறுநீர் அசுத்தம் பட்ட நீர் மனிதர்களின் தோல், கண்கள் ஆகியவற்றில் குணமடையாத புண்கள் ஆகியவற்றில் படுவதன் மூலமாக ஏற்படுகின்றது.

இந்த நோயானது ஒரு மனிதனிடம் இருந்து இன்னொரு மனிதனுக்குத் தொற்றுவதில்லை. இந்த நோயால் பாதிக்கப்பட்ட விலங்கின் சிறுநீரில் இருந்து பரவுகிறது. மேலும் அது ஈரப்பதம் அதிகமாக இருக்கும் இடங்களிலும் துரிதமாகத் தொற்றிக் கொள்கிறது.

எலிகள் மற்றும் கள எலிகள் ஆகியவை அடிப்படைக் காரணங்களாக இருந்தபோதும் ஏனைய பாலூட்டிகளும் இது பரவக் காரணமாக இருக்கின்றன. பாதிக்கப்பட்ட பக்றீரியாவை கடத்துவதற்கு சாத்தியமுள்ள வாழ்விடங்களின் வகைகளாக சேறு நிரம்பிய ஆற்றங்கரை, வயல், சாக்கடைகள், அடுப்பு இடுக்குகள், சேறு நிரம்பிய கால்நடை வளர்ப்பு பகுதிகள், களஞ்சிய அறைகள் போன்றவை இருக்கின்றன.

இது அசுத்தமான உணவு மற்றும் நீரினை விழுங்குதல், அல்லது தோலில் படுதல், கண்கள் அல்லது மூக்கின் மீது அசுத்தமான நீர் தெறித்தல் அல்லது நோய் தொற்றிய நீர், திறந்த காயப்பகுதிகளில் படுதல் ஆகியவை காரணமாக நோய் ஏற்படலாம்.

இதன் அறிகுறிகள் அதிகமான காய்ச்சல், தீவிர தலைவலி, தசை வலிகள் மற்றும் வாந்தியெடுத்தல் உள்ளிட்டவை சிவந்த கண்கள், அடிவயிற்று வலி, வயிற்றுப்போக்கு மற்றும் தடித்தல் உள்ளிட்டவை ஏற்படலாம்.

மனிதர்களில் அறிகுறிகள் 4 முதல் 14 நாள் வரையிலான நோய்ப்பாதிப்புக் காலங்களுக்குப் பிறகு தோன்றலாம். மேலும் மூளை உறையழற்சி, மிகுதியான சோர்வு, காது கேளாமை, மூச்சுத் திணறல், இரத்த யூரியாமிகைப்பு மற்றும் சிறுநீரக இடைத்திசுக் குழல் வடிவ திசுப்பகுதி அழுகல் உள்ளிட்ட சிக்கல்கள் ஏற்படலாம். இதன் விளைவாக சிறுநீரகச் செயலிழப்பு மற்றும் பொதுவாக கல்லீரல் செயலிழப்பு ஏற்படலாம்.

2008 ஆம் ஆண்டளவில் தான் இலங்கையில் இந்த தொற்று நோய் அதிகளவில் காணப்பட்டது. யாழில் குறித்த தொற்று அதிகளவில் காணப்படாத பட்சத்தில் தென்பகுதியில் இருந்து வருபவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார்கள் எனத் தெரிவித்தார்.

யாழ். மாவட்டத்தில் இந்த வருடம் இந்த நோய்த் தொற்றுக்கு உள்ளாகிய 15 பேரில் 14 பேர் உரிய முறையில் சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


விதை வெங்காயத்தின் விலை உயர்வு!
பேருந்து கட்டண திருத்ததிற்கு அமைச்சரவை அனுமதி!
கடன் தொல்லையால் நேர்ந்த சோகம்: ஒரு குடும்பமே தீக்குளித்த அவலம் - மூன்று பேர் பலி!
சிரிய இனப்படுகொலைக்கு எதிராக யாழ்.பஸ் நிலையம் முன்பாக இன்று கண்டனப் போராட்டம்!
விபத்துக் காப்புறுதி அவசியம் : கடற்தொழிலாளர்களுக்கு நீரியல் வளத் திணைக்களம் சுட்டிக்காட்டு!