யாழ்ப்பாண பல்கலையில் மோதல் – 6 பேர் கைது!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் முகாமைத்துவ பீடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணர்வகளிடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் படுகாயமடைந்த நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ்ப்பாண பல்கலைக்கழக முகாமைத்துவ பீடத்தில் 3 வருடத்தில் கல்வி பயிலும் தென்னிலங்கை மாணவர்கள் சிலர் வெளியில் தங்கி தமது கல்வியை தொடர்ந்து வருகின்றார்கள். அவ்வாறு வெளியில் தங்கியுள்ள மாணவர்களை தாம் தங்கியுள்ள விடுதிக்கு வந்து தங்குமாறு ஏனைய மாணவர்கள் அழைத்துள்ளனர். அவ்வாறு அழைக்கப்பட்ட மாணவர்கள் வருகை தராததையடுத்து மாணவர்கள் நேற்று முன்தினம் (சனிக்கிழமை) பல்கலைக்கழக மைதானத்தில் தகராற்றில் ஈடுபட்டுள்ளனர்.
அந்த தகராற்றின் போது, தாக்குதலுக்குள்ளான மாணவர்கள் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர். முறைப்பாட்டின் பிரகாரம் குறித்த மாணவர்களை விசாரணைக்கு வருமாறு நேற்று (ஞாயிற்றுக்கிழமை) பொலிஸார் அழைத்த போது, குறித்த மாணவர்கள் 7 பேர் ஏனைய மாணவர்கள் தங்கியிருந்த நோர்தேன் சென்ரருக்கு முன்பாக இருந்த வீட்டில் தங்கியிருந்த 8 மாணவர்கள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.
தாக்குதலில் 4 மாணவர்கள் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதலில் படுகாயமடைந்த மாணவன் ஒருவர் அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், 6 பேர் கோப்பாய் பொலிஸாரினால் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்களிடம் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் பின்னர் நீதிமன்றில் அவர்களை முற்படுத்துவார்கள் என்று கோப்பாய் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
Related posts:
|
|