யாழ்ப்பாணம் – ஊர்காவற்துறை இரவு நேரப் பேருந்து சேவையில் போதையில் இளைஞர்கள் அட்டகாசம்

Wednesday, November 15th, 2017

யாழ்ப்பாணத்தில் இருந்து இரவு 7 மணிக்கு ஊர்காவற்துறை 780 வழியில் பயணிக்கும் தனியார் பேருந்துகளில் மது போதையில் செல்வோரின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றதாக பயணிகள் கவலை தெரிவித்துள்ளனர்.

780 வழியில் பயணிக்கும் இறுதிப் பேருந்து என்பதால் இவற்றில் யாழ்ப்பாணத்திற்கு அலுவல்கள் நிமித்தம் வரும் அதிகமான மக்கள் பயணிக்கின்றனர்.

இந்நிலையில் இப் பேருந்தில் நாளாந்தம் மது போதையுடன் யாழ்ப்பாணத்தில் ஏறும் இளைஞர் குழு போக்குவரத்து செய்யும் பயணிகள் முதல் சாரதி, நடத்துநர் அனைவரோடும் முரண்படுவதோடு அநாகரிகமாக பெண்கள் முதல் வயோதிபர்களையும் ஏசுவதாக மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

கடந்த காலங்களில் இவர்களைக் கட்டுப்படுத்த முயன்ற பேருந்தின் நடத்துநர் மற்றும் சாரதிகளை தாக்கிய சம்பவங்களும் இடம்பெற்றன.

இப்பேருந்தில் பெண்கள் பயணிக்க முடியாத நிலை காணப்படுவதோடு அதிக கூட்டம் காணப்படும் வேளைகளில் வேண்டுமென்றே பெண்கள் மீது விழுவதும் அங்கே சேட்டைகள் புரிவதும் அதிகரித்து வருவதாக கவலை வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து சேவையில் ஈடுபடும் வேளைகளில் பொலிஸார் கண்காணித்து உரிய மதுபோதை கும்பல்களின் அட்டகாசத்தை கட்டுப்படுத்த வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts: