யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்துக்கு இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரவு!

தமிழ் அரசியல் கைதிகளை அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனையின்றி விடுதலை செய்ய வலியுறுத்தியும், உணவு ஒறுப்புப் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளின் நியாயமான கோரிக்கைகளை வலியுறுத்தியும் அதனை இழுத்தடிப்பின்றி உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அரசையும், பொறுப்புக்கூறவேண்டிய தமிழ்த் தரப்பினரையும் வலியுறுத்தி மேற்கொள்ளப்பட்ட பொதுஅமைப்புக்களின் போராட்டத்தின் தொடர்ச்சியாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்டு வரும் போராட்டத்துக்குப் பூரண ஆதரவையும், வரவேற்பையும் தெரிவிப்பதாக இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இன்று செவ்வாய்க்கிழமை(31) இரவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
சமூக நீதிக்கான தேடல் வியாபித்துள்ள பல்கலைக்கழக மாணவர்களின் செயற்பாட்டைஅனைத்துத் தரப்பினரும் கோட்பாட்டு ரீதியாக ஆதரிக்க வேண்டியது சமூகக் கடமையாகும். அரசியல் கைதிகளின் விடுதலை என்பது தமிழ் மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கான பங்களிப்பை மேற்கொண்டவர்களுக்குத் தமிழ் சமூகம் செய்யக்கூடிய நன்றிக்கடன் என்பதை அனைத்துத் தரப்பினரும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
மாணவர்களை அச்சுறுத்தல் மூலம் நசுக்கும் செயற்பாட்டை செய்யும் எவராயினும் தமிழ் மக்களின் சமூகக் கடமையை நிறைவேற்றத் துடிக்கும் மாணவர்களுக்கு இடைஞ்சல் புரிந்தவராகவே வரலாற்றில் இடம்பிடிப்பார். அத்தகைய வரலாற்று அவமானத்தை எவரும் பெற்றுவிடக்கூடாது என்பதை இலங்கை ஆசிரியர் சங்கம் வேண்டிநிற்கின்றது.
எனவே, அரசியல் கைதிகள் அரசியல் தீர்மானத்தின் அடிப்படையில் நிபந்தனையற்ற வகையில் விடுதலை செய்யப்படவேண்டும் என்ற கோட்பாட்டை முன்வைத்து இணைக்கப்பட்ட பொதுஅமைப்புக்களுடன் இணைந்து அரசியல் கைதிகளின் நிபந்தனையற்ற விடுதலைக்காக குரல்கொடுப்பவர்கள் எனும் வகையில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் ஆதரிக்கின்றது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Related posts:
|
|