யாழ்ப்பாணத்தை அச்சுறுத்தும் வாள்வெட்டு:  ஒரு வாரத்தில் 20 பேர் படுகாயம்!

Wednesday, November 15th, 2017

அண்மைய சில தினங்களாக யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இனந்தெரியாத குழுக்களால் மேற்கொள்ளப்பட்ட வாள்வெட்டுத் தாக்குதலில் 20 இக்கும் அதிகமானவர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் இதுவரை குறித்த சம்பவம் தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என பொதுமக்களால் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இந்நிலையில் குடாநாட்டில் நேற்று இரவு வாள்வெட்டுக் குழுவால் மேற்கொள்ளப்பட்ட கண்மூடித்தனமான கொலைவெறித் தாக்குதலில் 9பேர் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்ததுடன் பல இலட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்களும் சேதமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மானிப்பாய்-சங்குவேலி, நல்லூர், யாழ்ப்பாணம், கோண்டாவில், ஆறுகால்மடம் ஆகிய பகுதிகளில் ஒரே இரவில் இந்தத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன் வாள்வெட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்தவர்கள் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவங்கள் தொடர்பாக தெரிய வருகையில்,

மானிப்பாய்- சங்குவேலி காளிகோவிலுக்கு அருகில் உள்ள வீடு ஒன்றிலிருந்து கொழும்பு செல்வதற்கு சிலர் அயுத்தமாகியுள்ளனர். அவர்களை ஏற்றிச்செல்வதற்காக முச்சக்கரவண்டியுடன் ஒரு இளைஞர் வந்து வீட்டின் முன் நின்றுள்ளார்.

அப்போது இரவு 7.30மணியளவில் 5மோட்டார் சைக்கிள்களில் வந்த 10பேர் கொண்ட குழுவினர் முச்சக்கரவண்டி ஓட்டுநரை வாளினால் வெட்டுவதற்கு வந்துள்ளனர். அப்போது அந்த இளைஞர் வீட்டினுள் சென்றுள்ளார். அவரைத் துரத்திச் சென்ற அந்தக் குழுவினர் வீட்டில் நின்றிருந்த ஆண்களை தாறுமாறாக வெட்டியதுடன் அந்த இளைஞனையும் கொரூரமாக வெட்டியுள்ளனர். பின்னர் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களையும் மிச்சம்விடாது அடித்து நொருக்கி விட்டு சென்றுள்ளனர்.

போகும் வழியில் கடைக்கு முன்நின்றிருந்த தோட்டார் சைக்கிள் ஒன்றையும் கொத்தி தாக்கிவிட்டு வாளினால் இரத்தம் சொட்டச் சொட்ட வீதியால் சென்றுள்ளனர். இந்த சம்பவத்தில் முச்சக்கரண்டி ஓட்டுநர், வீட்டில் இருந்த தந்தை, பெரிய தந்தை மற்றும் மகன் ஆகியோர் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் மானிப்பாயைச் சேர்ந்தவர்களான முச்சக்கரவண்டி ஓட்டுநர் பத்மநாதன் ஜெனி (வயது30) மற்றும் சிவகுருநாதன் (வயது54), ரவிசங்கர் (வயது44), பகீரதன் (வயது17) என்பவர்களே வாள்வெட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

இதேவேளை, யாழ் நல்லூர் பகுதியில் ஆங்காங்கே இரவு 8 மணியளவில் நடைபெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் தலை,கால்,கை போன்றவற்றில் படுகாயமடைந்த நிலையில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்

ஆனைக்கோட்டை ஆறுகால்மடம் பகுதியிலுள்ள வீடொன்றுக்குள் புகுந்த 10பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டியதுடன் அங்கிருந்த பொருட்களை உடைத்து நாசமாக்கியுள்ளனர்.

4மோட்டார் சைக்கிளில் வந்த 10பேர் தமது முகத்தை மூடிக்கட்டியிருந்ததுடன் கோட் அணிந்திருந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. கும்பலின் வாள்வெட்டுக்கு இலக்காகி ஆனைக்கோட்டை லோட்டஸ் வீதியைச் சேர்ந்த குலசிங்கம் குலபிரதீபன் (வயது35) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கோண்டாவில் டிப்போவுக்கு முன்பாக உள்ள உணவகத்துக்குள் நேற்றிரவு 8.10 மணியளவில் புகந்த கும்பல் அங்கிருந்த தளபாடங்களை அடித்துச் சேதப்படுத்தியதுடன், ஒருவரையும் வெட்டிக் காயப்படுத்தியது.

சம்பவத்தில் புத்தூர் கிழக்கைச் சேர்ந்த செல்வராசா மணிமாறன் (வயது27) என்பவர் படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரத்தில் 20க்கும் அதிகமான வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர். இதுவரை எவரும் குறித்த சம்பவங்கள் தொடர்பாக கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: