யாழ்ப்பாணத்தில் விசேட கருத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் அதியுயர் பெறுபேறுகளைக் கொண்ட முன்னுரிமைப்படுத்தப்பட்ட கருத்திட்டங்கள் உடனடியாக ஆரம்பிக்கப்படவுள்ளன.
இதில் குருநகர் மீன்பிடி துறைமுக நங்கூரமிடும் தளம் அபிவிருத்தி, யாழ்ப்பாண அருணோதயா கல்லூரி அபிவிருத்தி வேலைத்திட்டம், தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலைக்கான அவசர உபகரண தேவைகளை பூர்த்திசெய்யும் வேலைத்திட்டம் என்பன உள்ளடங்குகின்றன.
தேசிய கொள்கைகள், பொருளாதார அபிவிருத்தி, மீள்குடியேற்றம், புனர்வாழ்வளிப்பு, வடக்கு மாகாண அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதியினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருநகர் மீன்பிடித்துறை நங்கூரத் தளமானது 3 ஆயிரத்து 117 கடற்றொழிலாளர் குடும்பங்களை உள்ளடக்கிய, 10 ஆயிரத்து 760 அங்கத்தவர்களைக் கொண்ட கடற்தொழில் மையமாகவும், அதில் 90 சதவீதமான மக்களின் வாழ்வாதாரம் கடற் தொழிலை மையமாகக்கொண்டுள்ளது.
வருடாந்த மீன்பிடி உற்பத்தி 7ஆயிரத்து 390 மெற்றிக் தொன்களாகவும் மேலும் 562 மெற்றிக் தொன் கருவாடு உற்பத்திகளைக் கொண்டதுமான ஒரு கடற்தொழில் பொருளாதார வலையமாகவும் காணப்படுகின்றது.
இந்த துறையின் அபிவிருத்திக்கு கடற்கரை சார்ந்த மீன்பிடித் துறைக்கான வசதிகள் போதியளவு காணப்படாமை பாரிய சவாலாக அமைந்துள்ளது.
எனவே சில உடனடி தேவைகளை நிறைவு செய்வதற்கு 33.83 மில்லியன் ரூபா நிதியில் இந்த கருத்திட்டம் அனுமதிக்கப்பட்டு அமுலாக்கப்பட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சிவஞானசோதி குறிப்பிட்டுள்ளார்.
Related posts:
|
|