யாழ்ப்பாணத்தில் நேற்று 6 ஆயிரத்து 72 பேருக்கு Covid -19 தடுப்பூசி வழங்கப்பட்டது – வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,!

Tuesday, June 1st, 2021

கொரோனா தடுப்பூசி மருந்து வழங்கல் திட்டத்தின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இரண்டாவது நாளில் 6 ஆயிரத்து 72 பேருக்கு  சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கை தெரிவு செய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் நேற்று எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 60 சதவீதமானோர் தடுப்பூசியை பெற்றுள்ளதை காட்டுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்பு பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கிராம அலுவலகர் பிரிவு ரீதியாக இனங்காணப்பட்ட கோவிட் – 19 நோயாளர்களின் எண்ணிக்கை மற்றும் சனத்தொகையின் அடிப்படையில் கணிப்பிடப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை சேர்ந்த 83 கிராம அலுவலகர் பிரிவுகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

அவற்றில் 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு ரீதியாக 11  கிராம அலுவலகர் பிரிவுகளில் கடந்த 30 ஆம் திகதி கோவிட்-19 தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

அந்நிலையில் நேற்று 10 ஆயிரத்து 52 பேருக்கு தடுப்பூசி மருந்து வழங்க எதிர்பார்க்கப்பட்டது. எனினும் 6 ஆயிரத்து 72 பேர் நேற்று தடுப்பூசி மருந்தைப் பெற்றுள்ளனர். இந்த எண்ணிக்கை 60 சதவீதமாக உள்ளது.

இதேவேளை தெரிவு செய்யப்பட்ட 29 கிராம அலுவலகர் பிரிவுகளில் 17 நிலையங்களில் இன்று தடுப்பூசி வழங்கப்படுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: