யாழ்ப்பாணத்தில் நிர்க்கதியாகி நிற்கும் பிற இடத்தவர்களுக்கு நிவாரணம் வழங்க ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி நடவடிக்கை!

Saturday, April 11th, 2020

யாழ் மாவட்டத்திற்கு தொழில் நிமிர்த்தமோ அற்றி இதர தேவைகளுக்காகவோ பிற மாவட்டங்களில் இருந்து வருகை தந்து மீளவும் தமது சொந்த இடங்கள், பிரதேசங்களுக்கு செல்ல முடியாதிருப்பவர்கள் சொந்த இடங்களுக்கு மீளவும் செல்ல நடவடிக்கைகள் மேற்கொள்டுளப்பட்டுவரும் நிலையில் அதுவரையான காலப்பகுதியில் நிர்க்கதிக்குள்ளாகி இருப்பவர்களுக்கு நிவாரணங்களைப் பெற்றுக் கொடுப்பதற்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி மேற்கொண்ட நடவடிக்கைக்கு யாழ் மாவட்ட அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

கடற்றொழில் மற்றும் நீரக  வள மூலங்கள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஆலோசனைக்கு அமைய அமைச்சரின் விசேட பிரதிநிதியான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வேலும்மயிலும் குகேந்திரன் இது தொடர்பில் யாழ் மாவட்ட அரச அதிபரது கவனத்துக்கு கொண்டு சென்றிருந்தார். இதையடுத்தே குறித்த பிரச்சினைக்கான தீர்வுக்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் தெரியவருவதாவது –

நாட்டில் அசாதாரண நிலைமை ஏற்பட முன்னர் இலங்கையின் ஏனைய மாவட்டங்களிலிருந்து மட்டுமல்லாது யாழ்.மாவட்டத்தின் பிற பிரதேசங்களிலிருந்தும் தொழில் நிமிர்த்தம் தத்தமது சொந்த இடங்களைவிட்டு இடம் மாறிச் சென்றவர்கள் கொரோனா தொற்று பரவலை தடுப்பதற்காக அரசாங்கம் நடைமுறைப்படுத்தியுள்ள ஊரடங்கு சட்ட நடைமுறையால் சொந்த இடங்களுக்கு மீளவும் செல்லமுடியாத நிலையில் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

அத்துடன் நடைமுறையிலுள்ள இந்த ஊரடங்கு உத்தரவு மக்களை பாதுகாக்கும் ஒரு கவசமாக இருப்பதால் அது தவிர்க்கமுடியாததொன்றாக உள்ளது. இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு ஊரடங்கு சட்டம் நடைமுறையில் தொடர்வதால் வெளியிடங்களிலிருந்து வந்தவர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு இடர்பாடுகளை சந்தித்துள்ளனர். அத்துடன் அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவிகள் கூட கிடைக்காதுள்ளது எனவும் அதற்கான தீர்வுகளை துரிதமாகக் காணவேண்டும் என்றும் வேலும்மயிலும் குகேந்திரன் அரச அதிபருக்கு சுட்டிக்காட்டியிருந்தார். இதனையடுத்து யாழ் மாவட்டத்தில் வெளியிடங்களிலிருந்து வந்து நிர்க்கதியாகியுள்ளவர்கள்  தத்தமது இருப்பிடங்களுக்கு மீளவும் திரும்பும்வரை அவர்கள் தற்காலிகமாக இருக்கும் இடங்களில் நிவாரணங்களை பெற்றுக்கொள்ள நடவடிக்கை மேற்கொள்வதற்கு அரச அதிபர் இணக்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts: