யாழ்ப்பாணத்தில் தொடர்ந்தும் கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை உயர்வு!

Saturday, June 19th, 2021

கடந்த 24 மணிநேரத்தில் வடக்கில் ஆயிரத்து 27 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் 85 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதில் கரவெட்டி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த 10 மாதக் குழந்தையும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையின் தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட 10 நாள் குழந்தையும் உள்ளடக்குவதாகவும் சுகாதார தரப்பு தகவல்கள் குறிப்பிட்டுள்ளன..

அதனடிப்படையில் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மானிப்பாய் பிரதேச மருத்துவமனையில் 11 பேருக்கும், கரவெட்டி, நல்லூர், யாழ்ப்பாணம் மாநகர சபை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் தலா 10 பேருக்கும், யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை மற்றும் யாழ்ப்பாணம் சிறைச்சாலை ஆகியவற்றில் தலா 8 பேருக்கும், பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் 3 பேருக்கும், சங்கானை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 2 பேருக்கும், அளவெட்டி பிரதேச மருத்துவமனையில் 2 பேருக்கும் என 64 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 3 பேருக்கும், மாவட்ட மருத்துவமனையில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் கண்டாவளை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் 8 பேருக்கும், கரைச்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் சகாதார தரப்பினரது தகவல்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை யாழ்ப்பாணத்தின் சண்டிலிப்பாய் கிராமத்திலுள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்ற 78 பேரில் 24 பேருக்கு கொவிட் வைரஸ் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தொற்றாளர்கள் இனம் காணப்பட்டதையடுத்து யாழ்ப்பாண சுகாதார அதிகாரிகள் ஏனைய 54 பேரையும் நேற்றுமுதல் 14 நாட்களுக்கு சுயதனிமைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே குறித்த திருமண நிகழ்வுக்கு 15 பேர் மட்டுமே கலந்து கொள்ள அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: