யாழ்ப்பாணத்தில் காற்றுடன் கூடிய மழை!

Monday, March 12th, 2018

கடும் வறட்சியின் பின்னர் யாழ்ப்பாணத்தின் பல பாகங்களிலும் இன்று பரவலபக பெருமழை மழை பெய்துவருகின்றமையால் மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

இன்று காலை முதல் யாழ் மாவட்டத்தின் அநேக பகுதிகளில் அதிக காற்றுடன் மழை பெய்தவருகின்றது.

இதனிடையே இலங்கையைச் சூழவுள்ள வளிமண்டலத்தில் ஏற்பட்ட ஒரு அலைபோன்ற தளம்பல் நிலை ஒரு தாழமுக்கப் பரப்பாக தீவிரமடைந்துள்ளதுடன் அது மேலும் வலுவடையுமென இலங்கையின் காலநிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கை இன்று அதிகாலை வெளியிடப்பட்டுள்ள நிலையில் அதில் –

இது இலங்கையின் தென் பகுதியில் மையம் கொண்டிருப்பதுடன் மேற்கு – வடமேற்கு திசையில் நகரக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதனால் மேல், தென், தென்கிழக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் (மணித்தியாலத்துக்கு 50 – 60 கிலோ மீற்றர் வரையான) பலத்த காற்று எதிர்பார்க்கப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பாகங்களில் (மணித்தியாலத்துக்கு 40 – 50 கிலோ மீற்றர் வரையான) ஓரளவு பலத்த காற்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

தென், ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் சில இடங்களில் (100 மி.மீக்கும் அதிகமான ) பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஊடாக முல்லைத்தீவு வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற் பகுதிகளில் பலத்த மழை பெய்வதற்கான சாத்தியம் உயர்வாகக் காணப்படுவதுடன், அவ்வேளைகளில் காற்றின் வேகமானது சடுதியாக (மணித்தியாலத்துக்கு 70 – 80 கிலோ மீற்றர் வரை) அதிகரித்து வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் தற்காலிகமாக கடல் மிகவும் கொந்தளிப்பாக காணப்படுவதுடன் காற்றின் வேகமானது சடுதியாக அதிகரித்து வீசக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

எனவே மீனவர்கள் அடுத்த 48 மணித்தியாலங்களுக்கு இக் கடற்பகுதிகளுக்கு செல்வதை தவிர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளதுடன், கடலில் பயணம் செய்வோரும் எச்சரிக்கையாக செயற்படுமாறு வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

Related posts: