யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்றை தடுக்க எலிகளை கட்டுப்படுத்த வேண்டும் – பிரதிப் பணிப்பாளர் யமுனாநந்தா தெரிவிப்பு!

Saturday, October 3rd, 2020

யாழ்ப்பாணத்தில் எலிக்காய்ச்சல் தொற்று அரிதாக இருந்தாலும், எலிகளை கட்டுப்படுத்துவதன் மூலமே நோய் பரவலை தடுக்கலாம் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையின் பிரதிப் பணிப்பாளர் சி .யமுனாநந்தா தெரிவித்துள்ளார்.

யாழ்.மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் நோய்த் தொற்று தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்  இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்

இவ்விடயம் தொடர்பாக அவர்  மேலும் கூறியுள்ளதாவது – “எலிகளின் பரம்பல் இந்த நோய்க்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதேபோல் யாழ்ப்பாண குடாநாட்டை பொறுத்தவரைக்கும் எலிகளின் பெருக்கம் இந்நோய் பரவுவதற்கு ஒரு காரணமாக அமையும்.

குறிப்பாக யாழ்ப்பாணத்தை பொறுத்தவரை நகரமயமாக்கப்படும்போது வீடுகள் நெருக்கமாக கட்டப்படும்போது அங்கு உணவு பொருட்களை தீண்டுவதற்காக எலிகள் வருகின்றன. அதேபோல் பாம்புகளின் அளவு குறையும் போதும் எலிகளின் பெருக்கம் கூடும். இதனை யாழ்ப்பாண மக்கள் அவதானிக்கவேண்டும்.

அடுத்ததாக இந்த எலிகள் உணவுப் பண்டங்களை தீண்டுவதால் நோய்க்கிருமி தொற்றலாம். உணவு பண்டங்களில் சிறுநீர் கழிப்பதால், வீடுகளில் உள்ள நீர்த்தாங்கிகளில் எலிகள் இறங்கலாம் அல்லது சிறுநீர் கழிக்கலாம் இவ்வாறும் இந்த நோய் வரலாம்.

எனவே யாழ்ப்பாணத்தில் மிகவும் அரிதாக இருந்தாலும் எலிகளை கட்டுப்படுத்துவதால் இந்த நோய் பரவலை தடுக்கலாம். அடுத்ததாக இந்நோய் எருமை, மாடு, நாய் போன்றவற்றிலும் இருந்தும் நோய் தொற்று ஏற்படலாம்.

குறிப்பாக மிருகங்களை வளர்ப்பதற்காக ஒரு பிரதேசத்தில் இருந்து இன்னொரு பிரதேசத்திற்கு கொண்டுவரும்போதும் வளர்ப்பு பிராணிகள் மூலமும் இந்த நோய் தொற்று வரக்கூடிய சாத்தியக்கூறு காணப்படுகின்றது

அடுத்ததாக நோய்த்தொற்று அதிகம் உள்ள பகுதிகளிலிருந்து உணவு பொருட்களை களஞ்சியமாக வாகனங்களில் கொண்டு வரும்போதும் அங்கிருந்து இந்த நோய்க் கிருமிகள் தொற்றும் வாய்ப்புள்ளது எனவே இது தொடர்பாக மக்கள் அனைவரும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும்” என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: