யாழ்ப்பாணத்தில் அதிகளவு நிலத்தடி நீரை உறிஞ்சும் உணவு விடுதி உரிமையாளர்கள்!

Tuesday, April 17th, 2018

யாழ்ப்பாண மாவட்டத்தில் நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி சட்டத்துக்கு முரணாக அதிகளவான நிலத்தடி நீரை உணவு விடுதி உரிமையாளர்கள் எடுத்து வருவதாக நீர்வள ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அவர்கள் இது தொடர்பாக தெரிவித்ததாவது-

யாழ்ப்பாணத்தில் நிலத்தடி நீரைப் பாவிப்பதற்கு வலுவான சட்ட ஏற்பாடுகள் இல்லாது விட்டாலும் ஒரு நாளைக்கு எவ்வளவு நீரை எடுக்க முடியும் எனக் கட்டுப்பாடு உள்ளது. ஆனால் அதனை மீறி உணவகங்களிலும் ஹோட்டல்களிலும் சட்டத்துக்கு முரணாக அதிகளவான நிலத்தடி நீர் உறிஞ்சி எடுக்கப்பட்டு வருகின்றது.

யாழ்ப்பாணத்தில் முக்கியமாக நகரில் உள்ள உணவு விடுதிகளில் அதி நவீன தொழில்நுட்ப சாதனங்களைப் பயன்படுத்தி நிலத்தடி நீரினை உறிஞ்சி எடுத்து விடுதித் தேவைக்குப் பயன்படுத்தி வருகின்றனர். இதனை யாரும் கண்டுகொள்வதில்லை. எனவே சட்ட அனுமதி எடுக்காது நிலத்தடி நீரினை உறிஞ்சி எடுக்கும் உணவு விடுதிகள் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நிலத்தடி நீரினை அளவுக்கு அதிகமாக எடுப்பதனை கட்டுப்படுத்தாது விட்டால் அந்த விடுதிகள் அமைந்துள்ள பகுதியை சூழவுள்ள நிலத்தடி நீர் நிலைகள் உவர்த்தன்மை அடையும் அபாயநிலை ஏற்பட்டுள்ளது. அதற்கான ஆரம்ப நிலையில் சில பிரதேசங்களும் காணப்படுகின்றன. எனவே இவ்விடயத்தில் அனைத்துத் தரப்பும் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என்றனர்.

Related posts: