யாழ்ப்பாணத்திலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருப்பு!

Sunday, May 22nd, 2022

யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெறுவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தமையை அவதானிக்க முடிந்தது.

இன்று அதிகாலைமுதல் வேலணை, கொக்குவில், திருநெல்வேலி, கல்வியங்காடு, அச்சுவேலி உட்பட யாழ்ப்பாணத்தில் உள்ள பல்வேறு  பகுதிகளிலும் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளை பெற்றுக்கொள்வதற்காக மக்கள் நீண்ட வரிசையில் காணப்படுகின்றனர்.

பரீட்சை கடமையில் ஈடுபடுவோர் மற்றும் வைத்தியசாலை ஊழியர்கள் உள்ளிட்டவர்களுக்கு எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகின்றன.  இதனால் பல இடங்களிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

ஒரு சில எரிபொருள் நிரப்பு நிலையங்கள் எரிபொருட்களை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் வழங்கினாலும் பல எரிபொருள் நிரப்பு நிலையங்கள் காலை நேரத்தில் மூடப்பட்டே காணப்பட்டது.

அதேவேளை எரிபொருள் பவுஸர்கள் வருகை தந்தவுடன் மதியம் மற்றும் மாலை வேளைகளில் சில எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விநியோகிக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே

எரிபொருள் நெருக்கடியை விரைவில் தீர்க்க முடியும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

எரிபொருள்களுடனான கப்பல்கள் சில நாட்டை அண்மித்துள்ளன. அத்துடன் மேலும் எரிபொருளை பெறுவதற்கான கொள்வனவு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கிடைக்கப்பெறும் அதிகளவான தொகை எரிபொருள் மின் உற்பத்தி நிலையங்களுக்கு பயன்படுத்தப்படும் என்றும் பிரதமர் கூறினார். அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ள போதும் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மட்டுப்படுத்தப்பட்டிருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

இதேவேளை, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தொடர்பாக தெரிவிக்கையில், இன்று அல்லது நாளை எரிபொருள் பிரச்சினையை பெருமளவில் தீர்க்கக்கூடியதாக இருக்கும் என்று எதிர்பார்க்கின்றோம்.இதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts:


மட்டக்களப்பு மாவட்டத்தில் கட்சி பணிகளை மேற்கொள்வதற்கு தேசிய எழுச்சி மாநாடு உந்துதலை தந்துள்ளது. சிவா
நீதிமன்றத்திற்கு அழுத்தம் காடுக்க அரசுக்கு எந்தத் தேவையும் இல்லை சுகாதார அமைச்சர் ராஜித!
குடியிருப்பு நிலங்களுக்கான உரிமங்களை பெற்றுத்தாருங்கள் - ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியிடம் சங்கிலியன் தோ...