யாழ்ப்பாணக் கல்லூரி, உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றின் வருடாந்த நிதியில் வெட்டு – உள்ள முறைகேடுகளே காரணம் என்கிறது அமெரிக்காவிலுள்ள தர்மகத்தா சபை!

Monday, January 9th, 2017

யாழ்ப்பாணக்கல்லூரி மற்றும் உடுவில் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் நிர்வாக மற்றும் நிதியியல் முறைகேடுகள் நடைபெறுவதாகச் சுட்டிக்காட்டி இரு பாடசாலைகளுக்கும் நிதி வழங்கும் அமெரிக்காவில் உள்ள தர்மகர்த்தாசபை 2017ஆம் வருடத்துக்கான 1ஆம் காலாண்டுக்கான நிதியில் 20 வீதத்தால் வெட்டுவதற்குத் தீர்மானித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இதற்கான கடிதத்தை தர்மகர்த்தா சபையில் தலைவர் வன.ரிச்சார்டெச் ஹீலியட் 2 பாடசாலைகளின் ஆளுநர் சபையின் தற்போதைய தலைவரான தென்னிந்திய திருச்சபையின் பேராயர் அதிக வணக்கத்துக்குரிய கலாநிதி டானியல் தியாகராஜாவுக்கு கடந்த 5 ஆம் திகதி மின்னஞ்சல் மூலமாக அனுப்பி வைத்திருந்திருக்கிறார்.

2015ஆம் ஆண்டுக்கான சுயாதீனமான கணக்காய்வு செய்யப்பட்ட கணக்கறிக்கைகளைப் பாடசாலைகள் சமர்ப்பிக்கத் தவறியமை, உடுவில் மகளிர் கல்லூரியில் கடந்த செம்டெம்பரில் புதிய அதிபர் நியமனத்திற்கு எதிராக அமைதியாகப்போராடிய மாணவிகள் தாக்கப்பட்டமை மற்றும் அது தொடர்பான விசாரணைகள் எதுவும் மேற்கொள்ளப்படாமை 2 பாடசாலைகளிலும் உரிய கல்வித்தகைமைகள் அற்ற ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டமை,

ஆசிரியர்கள் அச்சுறுத்தப்படுகின்றமை, பாடசாலை நலன்களைக் காட்டிலும் தமது தனிப்பட்ட நலன்களுக்கு இலங்கையில் உள்ள ஆளுநர் சபையின் உறுப்பினர்கள் முன்னுரிமை வழங்குகின்றமை போன்ற விடயங்கள் இந்த நிதிக் குறைப்புக்காக காரணங்களாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன.

வடமாகாண முதலமைச்சர் மாகாண கல்வி அமைச்சர், இரு பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும்  உலகம் முழுவதும் இருக்கும் பழைய மாணவர் சங்கங்களின் தலைவர்கள் உள்ளிட்ட 19 பேருக்கு பிரதி செய்யப்பட்டுள்ள.

இந்தக் கடிதத்தில் இரு பாடசாலைகளில் நிர்வாக மற்றும் நிதி நிர்வாக விடயங்களிலும் வெளிப்படைத் தன்மையைப் பேணும் வகையில் 9 முக்கியமான மாற்றங்களை எதிர்வரும் ஜீன் மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் மேற்கொள்ளுமாறு பாடசாலைகளின் ஆளுநர் சபைகளை தர்மகர்த்தா சபை அழுத்தமாகக் கேட்டிருக்கிறது.

இதற்கான முதற்கட்டப் பணிகளில் ஆளுநர் சபைகள் எவ்வாறு முன்னேற்றம் கண்டுள்ளன என்பதனை எதிர்வரும் மார்ச் 15ஆம் திகதியளவில் தமக்கு அறிவிக்க வேண்டும் எனவும் அந்தப் பணிகள் திருப்தி அளிக்காவிடின் 2ஆம் காலாண்டுக்கான நிதியிலும் குறைப்பு மேற்கொள்ளப்படும் எனவும் தர்மகர்த்தா சபையின் தலைவரினால் அனுப்பட்ட கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளையில் அண்மைய காலங்களில் இவ்விரு பாடசாலைகளிலும் க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளில் பெரும் வீழ்ச்சி நிலமை காணப்படுவதாகவும் பல வருடங்களாகவே மாவட்ட மட்ட, மாகாண மட்ட, தேசிய மட்ட ரீதியில் பரீட்சைப் பெறுபேறுகளில் எதுவித சாதனைகளும் எட்டப்படவில்லை என்பதும் கல்வியிலாளர்களால் சுட்டிக்காட்டப்படுகிறது.

பாடசாலை மாணவிகளின் ஒழுக்கம் மற்றும் கற்றல் கற்பித்தல் சூழலை மிக மோசமாகப் பாதிக்கக்கூடிய வகையில் உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர்கள் ஒருசிலர் நடந்து கொள்கிறார்கள் என்று கடந்த ஆண்டு பிற்பகுதியில் உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகளும் பெற்றோர்களும் இணைந்து மேற்கொண்ட எதிர்ப்புப் போராட்டங்கள் மற்றும் தொடர் நடவடிக்கைகளின் போது, கடுமையான குற்றச்சாட்டுகளும் விமர்சனங்களும் எழுந்தமை குறிப்பிடத்தக்கது.

இவை தொடர்பில் தென்னிந்தியத் திருச்சபை ஆயர் அவர்களும் பெற்றோர்களும் பழைய மாணவிகளும் நலன் விரும்பிகளும் நேரடியாக முறையிட்டும் அதே ஆசிரியர்கள் தொடர்ந்தும் மோசமாக மாணவிகளை பழிவாங்கும் படலம் தொடர்வதாகவும் அவர்கள் மீது எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் உரிய தரப்பில் மேற்காள்ளப்படவில்லை எனவும் பெற்றோர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

625.0.560.320.160.600.053.800.668.160.90

Related posts: