யாழில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தடுப்பூசி பெற்றுள்ளனர் – வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் தகவல்!

Wednesday, June 2nd, 2021

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் வெற்றிகரமாக மக்களுக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.

இந்நிலையில், இன்று நாலாவது நாளாக முன்னெடுக்கப்படும் நிலையில் நேற்றுவரை 13 ஆயிரத்து 892 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டதாக வட மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இந்த எண்ணிக்கையானது, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் எதிர்பார்க்கப்பட்ட மக்களின் எண்ணிக்கையில் 70.99 வீதம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் வழிகாட்டல்களுக்கு அமைவாக இந்தத் தடுப்பூசித் திட்டம் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் தடுப்பூசித் திட்டம், மக்கள் தொகையின் அடிப்படையில் கணிக்கப்பட்டு 11 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் உள்ள 83 கிராம அலுவலகர் பிரிவுகளில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

இதன்படி, 11 சுகாதாரப் பிரிவுகளில் தலா ஒரு கிராம அலுவலர் பிரிவு என 11 பிரிவுகளில் நேற்றுமுன்தினம் கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டதுடன் அன்றைய நாளில் பெயரிடப்பட்டவர்களில் 52 வீதம் பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

இரண்டாம் நாளன்று ஆறாயிரத்து 72 பேருக்கு சினோபார்ம் தடுப்பூசி செலுத்தப்பட்டது. இந்நிலையில், நேற்று 19 ஆயிரத்து 569 பேருக்குத் தடுப்பூசி செலுத்துவதற்கு எதிர்பார்க்கப்பட்டபோதும் 13 ஆயிரத்து 892 பேரே தடுப்பூசியைப் பெற்றுக்கொண்டனர். இந்த எண்ணிக்கை 70.99 வீதமாகும்.

இதேவேளை, தெரிவுசெய்யப்பட்ட கிராம அலுவலகர் பிரிவுகளில் இன்றும் தடுப்பூசி வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை நாட்டில் நேற்றைய தினத்தில் 57 ஆயிரத்து 706 பேருக்கு சீனாவின் சைனோபார்ம் (sinopharm) தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை 7 இலட்சத்து 97 ஆயிரத்து 205 பேருக்கு சைனோபார்ம் தடுப்பூசி போடப்பட்டுள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றைய தினம் 1,272 பேருக்கு கொவிசீல்ட் (covishield) தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதற்கமைய, இதுவரை 3 இலட்சத்து 48 ஆயிரத்து ,582 பேருக்கு கொவிசீல்ட் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் போடப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்றையதினம் 17 ஆயிரத்து 368 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ள நிலையில் இதுவரை 44 ஆயிரத்து 189 பேருக்கு ஸ்புட்னிக் V தடுப்பூசியின் முதலாவது டோஸ் போடப்பட்டுள்ளதாக தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: