யாழில் வீதிகளில் கழிவுகளை வீசிய 29 பேர் சிக்கினர்!

Thursday, January 3rd, 2019

யாழ் மாநகரப் பிரதேசத்தில் கண்டகண்ட இடங்களில் கழிவுப் பொருள்களைக் கொட்டிய குற்றச்சாட்டில் டிசெம்பர் மாதத்தில் 29 பேர் வரை பிடிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மாநகர எல்லைக்குள் பிடிக்கப்பட்ட 29 பேரில் 26 பேரிடம் தலா ஆயிரம் ரூபா வீதம் தண்டப்பணமும் ஏனைய மூவருக்கு எதிராக சட்ட நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகரசபைக்குட்பட்ட பகுதிகளில் கழிவுகளை வாகனங்களில் ஏற்றிவந்து இரவு நேரங்களில் வீதிகளில் வீசிச் செல்பவர்களை மடக்கிப்பிடித்து அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் அண்மைக்காலமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் உந்துருளி, முச்சக்கர வண்டிகள் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் வீட்டுக் கழிவுகள், வர்த்தக நிலையங்கள், உணவகங்கள் , கோழி இறைச்சிக் கடைகளின் கழிவுகள் ஆகியவற்றை ஏற்றிவந்து மக்கள் நடமாட்டம் இல்லாத பகுதிகளில் வீசிச் செல்கின்றனர்.

இதனால் பெரும் சுகாதாரச் சீர்கேடு நிலவுவதாக சுட்டிக்காட்டுகின்றபோதும் குறித்த இழிசெயலை படித்தவர்கள் முதல் பாமரர் வரையில் மேற்கொள்வது தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. இருப்பினும் குறித்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக ஈடுபடுபவர்களை இனங்கண்டு அவர்களை மடக்கிப் பிடிக்கும் பணியினை மாநகர சபையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts: