யாழில் கோர விபத்து – இரு மாணவர்களின் நிலை கவலைக்கிடம்!

Thursday, June 6th, 2019

யாழ்ப்பாணம் – கொட்டடி பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 5  பேர் காயமடைந்துள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணம் ஒஸ்மானியா பாடசாலைக்கு அருகில் இடம்பெற்ற குறித்த விபத்தில் காயமடைந்த பாடசாலை மாணவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

வேகத்தை கட்டுப்படுத்த முடியாத முச்சக்கரவண்டியொன்று வீதியில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு மாணவர்கள் மீதும் உந்துருளியில் வந்த இரண்டு மாணவர்கள் மீதும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

முச்சக்கரவண்டி மோதியில் உந்துருளி தூக்கி எறியப்பட்டு அருகில் அமைந்துள்ள கால்வாயொன்றில் விழுந்ததாக காவற்துறை மேலும் தெரிவித்துள்ளது.

உந்துருளியில் பயணித்த இரண்டு மாணவர்களின் நிலையே கவலைக்கிடமாக காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விபத்து தொடர்பில் யாழ்ப்பாணம் காவற்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் சந்தேகநபரான முச்சக்கர வண்டி சாரதி வாகனத்தைக் கைவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

குறித்த முச்சக்கர வண்டி சாரதியை கைது செய்வதற்காக சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் உடன் பொதுமக்கள் முரண்பட்டதுடன் பொலிஸார் சந்தேகநபரை கைது செய்வதில் இழுத்தடிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இதனால் ஒரு மணித்தியாலம் குறித்த பகுதியில் போக்குவரத்து ஸ்தம்பித்ததுடன் பொது மக்கள் வீதியில் இறங்கி பொலிஸாருடன் முரண்பட்டுள்ளனர்.

விபத்தினை ஏற்படுத்திய முச்சக்கரவண்டியின் சாரதியை சிசிடிவி கமரா உதவியுடன் கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக யாழ்ப்பாண பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Related posts: