யார் எதிர்த்தாலும் நிறைவேற்றுவேன் : ஜனாதிபதி!

Saturday, July 21st, 2018

எத்தகைய எதிர்ப்புகள் வந்தாலும், போதைப்பொருள் வர்த்தக குற்றத்திற்காக நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிறைக் கைதிகளுக்கு மரண தண்டனையை பெற்றுக்கொடுக்க தாம் தயார் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

நாட்டின் சனத்தொகையில் நூற்றுக்கு 1.4 சதவீதமானோர் போதைப் பொருள் பாவனைக்கு பழக்கப்பட்டுள்ளனர். 18 சதவீதமானோர் சிகரட் மற்றும் புதைத்தல் பாவனைக்கும், 14 சதவீதமானோர் மதுபான பாவனைக்கும் பழக்கப்பட்டுள்ளனர். இதில் பாடசாலை மாணவர்களும் உள்ளடங்குகின்றனர்.

இவ்வாறான நிலையில், மரண தண்டனையை நிறைவேற்ற மேற்கொண்டுள்ள தீர்மானத்தை அரசாங்கம் நிறுத்த உள்ளதாக வாராந்த பத்திரிகை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பொய்யானது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றுக்குள் போதைப்பொருள் கொண்டுசெல்லப்பட்டு, மாணவர்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டதாக நேற்று தமக்கு தகவல் கிடைத்தது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், எந்த எதிர்ப்பு வந்தாலும், போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.

இதற்கமைய, சட்டம், நீதி மற்றும் சிறைச்சாலைகள் துறையுடன் தொடர்புடைய அனைத்து அதிகாரிகளையும் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை அழைத்து, குழுவொன்றை நியமிக்க உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

மரண தண்டனை விதிக்கப்படவுள்ள குற்றவாளிகள் யாவர் என்பதையும், அதற்கான காலவரையறை என்பனவற்றை அந்தக் குழுதான் தீர்மானிக்கும் எனவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

Related posts: