யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை!
Friday, August 28th, 2020காட்டு யானைகள் கிராமங்களுக்குள் வருவதற்குப் பதிலாக காட்டுக்கே திருப்பி அனுப்பக்கூடிய பொறிமுறை ஒன்றை தயார் செய்து யானைகளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயுள்ள மோதலுக்கு இரண்டு வருடங்களுக்குள் நிலையான தீர்வொன்றை வகுக்குமாறு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் பல்வேறு மாவட்டங்களில் மக்கள் முகங்கொடுத்து வருகின்ற காட்டு யானைகள் கிராமங்களுக்கு வரும் பிரச்சினை தொடர்பில் சுமார் 40 வருட காலங்களாக கலந்துரையாடப்பட்டு வருகின்றது.
இதற்காக பல்வேறு தீர்வுகளை செயற்படுத்தினாலும் பிரச்சினை தீரவில்லை. மனிதர்களையும் யானைகளையும் பாதுகாக்கக்கூடிய உடனடி மற்றும் நிலையான தீர்வு ஒன்று கண்டறியப்படவேண்டியது மிகவும் முக்கியமானதெனவும் அவர் கூட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வனஜீவராசிகள் பாதுகாப்பு, யானை வேலிகள் மற்றும் அகழிகைகளை அமைத்தல் உள்ளிட்ட பாதுகாப்பு வேலைத்திட்டங்கள் மற்றும் காடுகளை மீண்டும் வளர்த்தல், வனவளங்கள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் எதிர்கால திட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே ஜனாதிபதியால் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
2019 ஆம் ஆண்டு யானைகள் கிராமங்களில் உட்புகுந்ததினால் 122 மனித உயிர்கள் இழக்கப்பட்டன. அத்துடன் 407 காட்டு யானைகள் இறந்துள்ளன. இவ்வருடத்தில் கடந்த 08 மாதங்களில் இழந்த மனித உயிர்களின் எண்ணிக்கை 62 ஆக காணப்படுவதுடன் சுமார் 200 யானைகளும் இறந்துள்ளன. இதனால் பயிர்ச் செய்கைகளுக்கும் அன்றாட வாழ்வுக்கும் அதுபோன்று காட்டு யானைகளின் இழப்பிற்கும் ஏற்பட்டுள்ள சவால் மிகப் பெரியது என்பதையும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 12 இலட்சம் ஹெக்டெயார் வன நிலங்கள் வனஜீவராசிகள் திணைக்களத்தின் கைவசம் உள்ள நிலையில் காட்டு யானைகளின் உணவு தொடர்பாக கண்டறிவதும் வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பொறுப்பென்பதையும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளதுடன் நீண்டகாலமாக நிலவி வரும் பிரச்சினைக்கு தீர்வொன்றைத் தேடுவதற்கு துறைசார் அதிகாரிகளுக்கு முடியாமல் போனதையிட்டு திருப்தியையும் வெளியிட்டுள்ளார்.
காட்டு யானைகள் கிராமங்களுக்குள் ஊடுருவுவதைத் தடுத்து, மனித வாழ்வினையும் பயிர் நிலங்களையும் பாதுகாப்பதற்காக நிலையான தீர்வொன்றைப் பெற்றுக்கொள்ளல் தொடர்பாக்க் கண்டறிவதற்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
வன ஒதுக்கீடுகளில் உள்ள குளங்கள், நீர் நிலைகளை புனர்நிர்மாணம் செய்வதுடன், அப்பிரதேசங்களில் புல்லினங்களை வளர்த்தலை அதிகரிப்பதன் முக்கியத்துவத்தை பொருளாதார புத்தெழுச்சி தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் பசில் ராஜபக்க்ஷ அவர்கள் சுட்டிக்காட்டினார்.
Related posts:
|
|