யாழ்ப்பாணத்தில் பிறப்பு வீதம் பெருமளவில் குறைவு – 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை!

Monday, March 6th, 2023

யாழ்.மாவட்டத்தில் பிறப்பு வீதம் குறைந்து செல்லும் நிலையில் இன்னும் சில வருடங்களில் சுமார் 50 பாடசாலைகள் மூடப்படும் அபாயமுள்ளதாக கலாநிதி ஆறு.திருமுருகன் எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில் –

யாழ்.தீவகத்தில் பல பாடசாலைகள் போதியளவு மாணவர் இன்மையால் மூடப்பட்டுள்ள அதேவேளை வலிகாமம் கிழக்கில் இரண்டு பாடசாலைகள் அண்மையில் மூடப்பட்டன. பாடசாலைகளை மூடுவதற்கு மாணவர்கள் இல்லாமையே காரணமெனக் கூறப்பட்டாலும் யாழ். மாவட்டத்தில் பல தனியார் பாடசாலைகள் முளைத்த வண்ணமுள்ளன.

யாழ்ப்பாணத்தில் புகழ் பூத்த கல்லூரிகளில் ஒன்றாகத் திகழ்ந்த உரும்பிராய் இந்துக் கல்லூரி மூடப்படும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ள நிலையில் அதனைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அனைவருக்கும் உள்ளது.

உரும்பிராய் இந்துக் கல்லூரியில் கல்விகற்ற பல மாணவர்கள் உலகளாவிய நீதியில் உயர் பதவிகளை வகித்துள்ளதுடன் இன்றும் பல உயர் பதவிகளை வகித்து வருகின்றனர். இவ்வாறான கல்லூரியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து செல்லும் நிலையில் எதிர்காலத்தில் மூடப்பட வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை இந்தப் பாடசாலை எதிர்நோக்கியுள்ளது.

அத்துடன் யாழ். மாவட்டத்திலுள்ள அறக்கட்டளை நிறுவனங்களில் ஐந்துக்கும் குறைவான நிறுவனங்களே நாடாளுமன்றத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

எனவே பொறுப்பு வாய்ந்தவர்கள் தமது கடமைகளை உரிய வகையில் நிறைவேற்றாது போனால் எமது இனத்தின் பரம்பல் குறைந்து செல்வதுடன் எதிர்காலத்தில் பல்வேறு சவால்களை தமிழ் மக்கள் எதிர்நோக்க வேண்டியேற்படுமெனவும் அவர் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: