மோசமான பொருளாதார நிலைமை காரணமாகவே வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேறுகின்றனர் – அமைச்சர் அலி சப்ரி தெரிவிப்பு!

Tuesday, November 29th, 2022

நாட்டில் நிலவும் மோசமான பொருளாதார நிலைமை காரணமாக வடக்கு, கிழக்கில் உள்ள மக்கள் நாட்டைவிட்டு வெளியேற முனைவதாக அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

அதன்படி, கடந்த ஆறு மாதங்களில் தமிழ்நாடு, வியட்நாம் மற்றும் உக்ரைனுக்கு அதிகளவானவர்கள் சென்றுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவித்தார்.

அதற்கமைய, சுமார் 302 தமிழர்கள் வியட்நாமிற்கும் ஏழு பேர் உக்ரைனுக்கும் தப்பிச் சென்றுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வியட்நாமில் உள்ளவர்களில் 85 பேர் திரும்பி வர ஒப்புக்கொண்டுள்ளதாகவும் அவர்கள் திரும்புவதற்கு அமைச்சு வசதிகளை செய்யும் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்த கருத்துக்கு பதிலளித்த அமைச்சர், அகதி அந்தஸ்து கோருவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்தும் மனித கடத்தலில் சிக்காமல் இருப்பது குறித்தும் வடக்கு, கிழக்கில் உள்ள மக்களுக்கு அறிவூட்டுவதற்கு ஒரு விளம்பரப் பொறிமுறை தேவை என தெரிவித்தார்.

அவர்கள் அகதி அந்தஸ்தில் அல்லது தவறான கடவுச்சீட்டில் சென்று கடத்தலில் சிக்கினால் அவர்கள் கஷ்டப்பட வேண்டியிருக்கும் என்று அவர்களுக்கு தெரிவிக்க விரும்புவதாகவும் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: