மேல் மாகாணத்திலிருந்து வெளியேறியவர்கள் பாதுகாப்புத் தேடி வரவேண்டாம் – சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் தெரிவிப்பு!
Saturday, October 31st, 2020சுகாதார தரப்பினரது தொடர்ச்சியான அறிவுறுத்தல்களையும் மீறி மேல் மாகாணத்தில் இருந்து ஏனைய பகுதிகளுக்குச் சென்றவர்கள் பாதுகாப்புத் தேடி தம்மிடம் வரவேண்டாம் என சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.
அத்துடன், இவ்வாறு வெளியேறியவர்கள் பொறுப்பில்லாது செயற்பட்டுள்ளதாகவும் அவர் கடுமையாக சாடியுள்ளார்.
மேலும் அவர் தெரிவிக்கையில் – “கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் இருந்து வெளியேறியவர்கள் வெளி மாவட்டங்களுக்குச் சென்றுள்ளனர். இவ்வாறானவர்கள் எங்கும் நடமாடாது வீடுகளில் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறேன்.
மேல் மாகாணத்திற்கு ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்படும் என ஆரம்பத்தில் முன்னெச்சரிக்கை விடுத்ததானது எவரையும் வெளியேற வேண்டும் என்பதற்காகவோ அல்லது சுற்றுலா செல்ல வேண்டும் என்பதற்காகவோ அல்ல.
மேல் மாகாணம் அதிக அச்சுறுத்தலான மாகாணமாக கருதியதன் காரணத்தினால் இங்குள்ள எவரையும் வெளியேற்றக்கூடாது என்பதற்காகவே நாம் அவ்வாறு மூன்று தினங்களுக்கு ஊரடங்கை பிறப்பித்தோம்.
ஆனால், பலர் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டத்தை விட்டு வெளியேறியுள்ளனர். இவர்கள் பொறுப்பில்லாதவர்கள் என்றே வெளிப்படையாகக் கூறுகின்றேன்.
மேல் மாகாணத்தை விட்டு எவரும் வெளியேற வேண்டாம் என நாம் தொடர்ச்சியாக கூறியும் இவர்கள் வெளியேறியுள்ளனர். இதற்குப் பின்னர் மீண்டும் அவர்கள் மேல் மாகாணத்திற்குள் வந்து தமது பாதுகாப்பை எதிர்பார்த்து எம்மிடம் வர வேண்டாம்.
நடைமுறை சிக்கல் என்னவென்பதை மக்கள் உணர வேண்டும், இதனையே நாம் தொடர்ச்சியாகக் கூறிவந்தோம். இங்கிருந்து வேறு பிரதேசங்களுக்குச் செல்பவர்கள் வெளிப் பகுதிகளுக்கும் நோயை பரப்பவே செய்துள்ளனர். இது பொறுப்பில்லாத செயற்பாடாகும்” என்றும் அவர் கடுமையாக சாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|