மூவின மக்களும் வாழும் மாகாணம் என்பதால் தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படும் நிலை காணப்படுகின்றது –  ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிரவாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Thursday, December 29th, 2016

எமது கட்சிக்கு கிழக்கு மாகாணத்தில் நாடாளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாத சூழலிலும் வடக்கைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்களைத் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு நியமித்து கிழக்கு மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளையும் அபிவிருத்திகளையும் மக்களின் அடிப்படைத் தேவைகளையும் மேற்கொண்டு டக்ளஸ் தேவானந்தா பெரும் பணிகளை முன்னெடுத்திருந்தார் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் யாழ். மாவட்ட மேலதிக நிர்வாகச் செயலாளர் ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் (ரங்கன்) தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு பலநோக்குக் கூட்டுறவுச் சங்க கேட்போர்கூட மண்டபத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற மக்கள் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் –

012

கிழக்கு மாகாணத்தில் ஏற்பட்ட அரசியல் சூழல் காரணமாக ஒரு இடைவெளி ஏற்பட்டிருந்த போதிலும் தொடர்ந்தும் கிழக்கு மாகாண மக்களின் அரசியல் அபிலாஷைகளை முன்னெடுக்கும் நோக்கிலேயே பொது அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்களின் கருத்துக்களைப் பெற்று நடைமுறை ரீதியான பிரச்சினைகள் மற்றும் அரசியல் ரீதியான செயற்பாடுகளை எமது தலைவர் முன்னெடுக்கவுள்ளார்.

கிழக்கு மாகாணம் மூவின மக்களை உள்ளடக்கியதொரு மாகாணம் என்பதால் இங்குள்ள நடைமுறைப் பிரச்சினைகளில் எமது தமிழ் சமூகம் புறக்கணிக்கப்படுவதும் ஒதுக்கப்படுவதுமான நிலை காணப்படுகின்றது. கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் தமிழ் மாகாண சபை உறுப்பினர்களும் மக்களின் பிரச்சினைகளை உரிய இடத்தில் எடுத்துச் சென்று பேசுவதைத் தவிர்த்து வருகின்றனர்.

01

இங்கு மக்கள் பிரதிநிதிகள் குறிப்பிட்ட விடயமான கல்வி வேலைவாய்ப்பு வாழ்வாதார விடயங்களில் கிழக்கு மாகாண அரசு தமிழ் சமூகத்தை புறக்கணிப்பதாகக் குறிப்பிட்டுள்ளனர். கிழக்கு மாகாண சபையில் ஆட்சி அதிகாரத்தில் உள்ள கட்சிக்கு முண்டுகொடுக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எமது மக்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவது என்பதை விட தமது பதவிகளைத் தக்க வைப்பதிலேயே அதிக கவனம் கொண்டுள்ளனர் என்பதையே புலப்படுத்தி நிற்கின்றது.

013

இந்நிலை மாற வேண்டுமெனில் கிழக்கு மாகாண மக்களுக்கு சரியானதொரு அரசியல் வழிகாட்டல் வேண்டும் என்பதைத் தெரிந்துகொண்ட நாம் எமது அரசியல் பணிகளை கிழக்கு மாகாணத்தில் வலுப்படுத்தவுள்ளோம். இதற்கான முன்னேற்பாடாகவே நாம் மக்களின் கருத்துக்களைப் பெற்று வருகின்றோம். மேலும் தமிழ் சமூகம் திருகோணமலை மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களில் புறக்கணிக்கப்பட்டு வருவதை இங்கு நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் வெளிக்காட்டி நிற்கின்றன.

014

எனவே பொது அமைப்புக்கள் புத்திஜீவிகள் சமூக ஆர்வலர்கள் கல்விமான்கள் எமது அரசியல் செயற்பாட்டிற்கான பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம் – என அவர் தெரிவித்துள்ளார்.

Related posts: