மூன்றாவது தடவையாகவும் நெடுந்தீவு பிரதேச சபை உபதவிசாளர் தெரிவு ஒத்திவைப்பு!

Tuesday, July 10th, 2018

நெடுந்தீவு பிரதேச சபை உபதவிசாளர் தெரிவு பெரும் இழுபறி நிலையில் இருப்பதால் நெடுந்தீவு மக்களின் தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் குறித்த பிரதேச சபை எதுவித அக்கறையையும் செலுத்தாது முடங்கிக் கிடக்கின்றது என பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச சபையின் உப தவிசாளராக தெரிவு செய்யப்பட்ட சண்முகம் லோகேஸ்வரன் அண்மையில் காலமான நிலையில் அவரது இடத்திற்கு புதியவரை நியமிப்பதற்கான வாக்கெடுப்பு நடத்துவதற்கு ஏற்கனவே இரண்டு முறை முயற்சிக்கப்பட்ட போதும், சபையை பெரும்பான்மை உறுப்பினர்கள் புறக்கணித்தமையால் உபதவிசாளர் தெரிவு தடைப்பட்டுப் போனது.

நடைபெற்று முடிந்த உள்ளுராட்சி சபை தேர்தலில் வடக்கில் பல சபைகள் தொங்கு நிலையில் காணப்பட்ட நிலையில் குறித்த நெடுந்தீவு பிரதேச சபையில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி அதிக ஆசனங்களை பெற்றிருந்த போதிலும் சுயேட்சைக் குழுக்களின் ஆதரவுடன் நெடுந்தீவு பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு கைப்பற்றியிருந்தது.

இந்நிலையில் சபையின் நடவடிக்கைகள் மக்கள் நலன் கருதியதாக அமையவில்லை என்றும் தவிசாளர் தன்னிச்சையாக செயற்படுகின்றார் என்றும் மக்களது அடிப்படைத் தேவைப்பாடுகள் கூட இதுவரை பெற்றுக்கொடுக்கப்படவில்லை என்றும் தெரிவித்து ஏற்கனவே கடந்த இரு சபை அமர்வுகளிலிருந்து ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி வெளிநடப்பு செய்திருந்தது.

இந்நிலையில் இன்றைய தினமும் குறித்த தெரிவுக்காக சபை வடக்கு மாகாண உள்ளூராட்சி மன்றங்களின் ஆணையாளர் பற்றிக் டிறஞ்சன் தலைமையில் கூடியது.

ஆனாலும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் 6 பேரும் சுயேட்சைக் குழு உறுப்பினர்கள் இருவரும் இன்றும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்திருந்தனர். இந்நிலையில் சபையில் பெரும்பான்மை உறுப்பினர்கள் புறக்கணித்தமையால் மூன்றாவது தடவையாகவும் உதவி தவிசாளர் தெரிவு மேற்கொள்ளமுடியாது போனதால் சபையின் உபதவிசாளர் தெரிவை உள்ளூராட்சி ஆணையாளர் மீண்டு ஒத்திவைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: