மூன்றாவது டோஸ் கொரோனா தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படடால் அதற்காக தயாராகுங்கள் – சுகாதார தரப்பினரக்கு ஜனாதிபதி உத்தரவு!

Friday, June 11th, 2021

நாட்டில் மூன்றாவது டோஸ் தடுப்பூசியை செலுத்தவேண்டிய தேவையேற்படும் என்றால் அதற்காக தயாராகுமாறு ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச துறைசார் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கொவிட் ஒழிப்பு சிறப்பு குழுக் கூட்டத்தின் போதே இவ்வாறு ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

சர்வதேச அளவில் தற்போது காணப்படும் நிலைமை மற்றும் மருத்துவ நிபுணர்களின் பரிந்துரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அவர் இந்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

பல நாடுகள் ஏற்கனவே மூன்றாவது டோசிற்கான மருந்துகளிற்கு உத்தரவிட்டுள்ளன என குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி இது தொடர்பில் கவனம் செலுத்தவேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தடுப்பூசிகளிற்கு சர்வதேச அளவில் பெரும் தேவை காணப்படுகின்றது என தெரிவித்துள்ள ஜனாதிபதி, போட்டி நிறைந்த சூழ்நிலையில், இலங்கைக்கு அதிகளவு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ள பல நாடுகளின் தலைவர்களுடன் தான் நேரடியாக கலந்துரையாடி உதவி கோரியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

பல நெருக்கடிகளின் மத்தியில் பெறப்பட்ட தடுப்பூசிகளை வெளிப்படையாக வழங்கவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியுள்ள ஜனாதிபதி 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசியை வழங்கவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்யுள்ளார்.

அதேநேரம், தொற்றா நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் தடுப்பூசி ஏற்றுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் துறைசார் அதிகரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன் முறையான தடுப்பூசி ஏற்றல் மற்றும் தடுப்பூசி ஏற்றிக்கொள்வோர் பற்றிய தரவுகளைச் சேகரிப்பதற்காக – தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் பிரத்தியேக மென்பொருளை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் – கிராம சேவகர் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மட்டத்தில் தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்கு திகதி மற்றும் நேரத்தை மக்கள் இலகுவாக ஒதுக்கிக்கொள்ள முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேநேரம் கொவிட் நோய்த்தொற்று அல்லாமல் மரணிப்பவர்களுக்கான இறுதிக் கிரியைகளும், பி.சி.ஆர். பரிசோதனைகளின் காரணமாகத் தாமதப்படுகின்றன என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதைக் கருத்திற் கொண்டு, வேறு காரணங்களால் இறந்தவர்களின் இறுதிச் சடங்குகளை 24 மணி நேரத்திற்குள் நடத்திமுடிக்க நடவடிக்கை எடுக்க கொவிட் ஒழிப்பு சிறப்பு குழு முடிவு செய்தது என்றும் இதன்போது ஜனாதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: