முன்பள்ளி ஆசிரிய சேவை தரம் 111 க்கான பரீட்சை சனியன்று நடைபெறாது!

Friday, April 6th, 2018

வடக்கில் முன்பள்ளி ஆசிரியர் சேவையின் தரம் 111 பதவிக்கு ஆள்சேர்ப்புச் செய்வதற்காக நாளை சனிக்கிழமை இடம்பெறவிருந்த திறந்த போட்டிப் பரீட்சை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

தவிர்க்க முடியாத காரணத்தால் பரீட்சை ஒத்திவைக்கப்பட்டதாக வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளர் சி.ஏ.மோகன்ராஸ் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவால் இந்தப் பரீட்சை நடத்தப்படவிருந்தது.

இந்தப் போட்டிப் பரீட்சைக்குத் தமது முன்னைய விளம்பரங்களில் கோரப்பட்ட அனைத்துத் தகைமைகளையும் கொண்டிருந்தும் 40 வயதுக் கட்டுப்பாடு காரணமாக விண்ணப்பிக்க முடியாதவர்களும் எதிர்வரும் 20 ஆம் திகதி 45 வயதைத் தாண்டாதவர்களாக இருக்கும் பட்சத்தில் இந்தப் பரீட்சைக்கு விண்ணப்பிக்க முடியும்.

இதற்கான விண்ணப்பங்களை எதிர்வரும் 20 ஆம் திகதி அல்லது அதற்கு முன்னர் தமது அலுவலகத்தில் நேரில் சமர்ப்பிக்க முடியும். குறித்த பரீட்சையை நடத்துதல் தொடர்பான திகதி சகல பரீட்சார்த்திகளுக்கும் பின்னர் அறிவிக்கப்படும். இது தொடர்பான மேலதிக விவரங்களை 021 221 9939 என்ற இலக்கத்துக்கு அழைப்பை ஏற்படுத்தித் தெரிந்து கொள்ளமுடியும் என்று மோகன்ராஸ் தனது செய்திக் குறிப்பில் மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts: