முன்னாள் போராளிகளது வாழ்வியலை மீண்டும் நிம்மதியிழக்க வைத்துள்ளது கூட்டமைப்பு-ஈ.பி.டி.பியின் யாழ் மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளர் ஶ்ரீரங்கேஸ்வரன்!

Monday, January 30th, 2017

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளால் உருவாக்கப்பட்ட ஜனநாயக போராளிகள் கட்சியை பழிவாங்கும் நோக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மிகப்பெரிய சூழ்ச்சி திட்டமொன்றை அரங்கேற்றிவருகின்றனர் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் யாழ்.மாவட்ட மேலதிக நிர்வாக செயலாளரும் முன்னாள் பருத்தித்துறை பிரதேசசபை தவிசாளருமான ஐயாத்துரை ஸ்ரீரங்கேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இன்றையதினம் கட்சியின் மந்திகை அலுவலகத்தில் கட்சியின் பருத்தித்துறை நகர மற்றும் பிரதேச வட்டார குழு உறுப்பினர்களுடனான கலந்துரையாடலில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் –

ஈழமக்கள் ஜனநாயக கட்சி மீதான மக்கள் எழுச்சியை தடுக்கும் முகமாக விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனால் 2002 ஆம் ஆண்டு கிளிநொச்சியில் வைத்து ஒருங்கிணைக்கப்பட்டு கட்டப்பட்டது தான் தமிழ் தேசிய கூட்டமமைப்பு என்பது அனைவரும் அறிந்த விடயம்.

கூட்டமைப்பு ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்து 2009 ஆம் ஆண்டு புலிகள் அமைப்பு அழிக்கப்படும் வரையான காலப்பகுதிவரை புலிகளது ஒருங்கிணைப்பின் பிரகாரமே அன்றைய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் செயற்பட்டு வந்தனர்.

ஆனால் 2009 ஆம் ஆண்டு யுத்தம் நிறைவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்ட சுமார் 12000 ற்கும் மேற்பட்ட போராளிகளை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவின் பெருமுயற்சி காரணமாக  அன்றைய ஆட்சியாளர்களால் சமூகத்தில் இணைந்து வாழ்வதற்கு அனுமதியளித்து விடுதலை செய்திருந்தது.

அதன் பின்னர் முன்னாள் போராளிகள் ஒன்றிணைந்து ஜனநாயக போராளிகள் கட்சி என்ற ஒரு அமைப்பை உருவாக்கியிருந்தனர். பாதிப்பக்குள்ளாகியிருக்கும் போராளிகளது நிலைமைகள் தொடர்பிலும், தமது குடும்பங்களின் நிலைமைகள் தொடர்பிலும் தமிழ் மக்களது அரசியல் செயற்பாடுகளில் புலிகள் கொண்டிருந்த பார்வையையும் முன்னிறுத்தி அவற்றை ஜனநாயக வழியில் முன்னெடுப்பதற்காக தமது அமைப்பை தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைக்குமாறும் தமது அமைப்பின் சில பிரதிநிதிகளுக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட தமிழ் தேசிய கூட்டமைப்பில் இடம் தருமாறும் கோரிக்கை விடுத்தனர்.

ஆனால் புலிகளின் தலைவர் பிரபாகரனது மறைவுககு பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் புலிகளை நிராகரித்ததுடன் அந்த அமைப்பை சேர்ந்த போராளிகளையும் ஓரங்கட்டும் செயற்பாடுகளில் மும்முரமாக செயற்பட்டனர். இதன் ஒரு அங்கமாக மாகாணசபை தேர்தலில் தமது கட்சியின் வாக்குவங்கியை  நிரப்புவதற்காக புலிகளின் திருமலை மாவட்ட தளபதியாக இருந்த சசிதரனின் (எழிலன்) மனைவி அனந்தியை பயன்படுத்தி வெற்றிகண்ட கூட்டமைப்பினர் அவரை நாடாளுமன்ற தேர்தலில் தமது கட்சியின் வேட்பாளராக உள்வாங்கி நாடாளுமன்றம் அனுப்பி புலிகளின் ஜனநாயக பார்வை மக்களிடம் செல்லதை விரும்பியிராத காரணத்தால் குறித்த தேர்தலில் அவருக்கான வாய்ப்பையும் தடுத்து நிறுத்தியிருந்தனர் தமிழ் தேசிய கூட்டமைப்பினர்.

ஆனால் போலி தமிழ் தேசியம் பேசுவதுடன் புலிகளது வீரங்களையும் தமது வீரவசனங்களாக மேடைகளில் முழக்கமிட்டு மக்களது வாக்குகளை அபகரிக்கும் செயற்பாடுகளை கனகச்சிதமாக முன்னெடுத்து சென்றனர்.

இதன் விளைவாக முன்னாள் போராளிகளை ஒன்றிணைத்த ஜனாநாயக போராளிகள் கட்சி சுயேட்சையாக தேர்தலில் போட்டியிட்டிருந்தது. அதனூடாக தமது ஜனநாயக பயணத்திற்கான வரவையும் உலகுக்கு கட்டியம் கூறியிருந்தது. இந்த வரவு தமிழ் தேசிய கூட்டமைப்பினரை கதிகலங்க செய்யதுடன் அவர்களது தலைமைகளுக்கு தலையிடியையும் ஏற்படுத்தியிருந்தது.

இது ஒருபுறமிருக்க, புலிகளால் கொண்டாடப்பட்டு வந்த மாவீரர் தினத்தை யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்ட பின்னர் தமது அரசியல் இலாபத்துக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கொண்டாடிவந்தனர். ஆனால் கடந்த ஆண்டு குறித்த ஜனநாயக போராளிகள் அமைப்பு முழுவிச்சாக நின்று மாவீரர் தினத்தை முழுமையாக கொண்டாடியதன் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மீது போராளிகளதும் மாவீரர்களதும் குடும்பங்கள் பெரும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்ததுடன் அவர்களை ஓரங்கட்டி நிராகரித்திருந்ததையும் காணமுடிந்தது. அத்துடன் இந்த செயற்பாடுகள் ஜனநாயக போராளிகள் அமைப்பை பலப்படுத்துவதாகவும் அமைந்திருந்தது.

புலிகளின் மறைவுக்கு பின்னர் தாம்தான் புலிகளின் ஏக பிரதிநிதிகள் என்றும் அடுத்த தலைமுறைக்கு தாங்கள்தான் தலைமை வகிப்போம் என்றும் மார்தட்டி திரிந்த கூட்டமைப்பினருக்கு குறித்த ஜனநாயக போராளிகளது அமைப்பு மக்கள் மத்தியில் வளர்ச்சியடைவதை ஜீரணிக்க முடியாது போனது.

இதனால் ஜனநாயக போராளிகளை முளையுடன் கிள்ளி எறிய வேண்டும் என முடிவு செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பினர் தமது கட்சியின் முக்கிய பிரமுகர் ஒருவரை கொலை செய்ய முன்னாள் போராளிகள் சதித்திட்டம் தீட்டியுள்ளனர் என ஒரு மிகப்பெரும் நாடகத்தை அரங்கேற்றி சில முன்னாள் போராளிகளை கைது செய்யவைத்து சிறைக்குள் அனுப்பியுள்ளனர்.

இந்த செயற்பாட்டின் மூலம் தமது வாக்கு வங்கிக்கு ஆபத்தாக இருக்குமென எண்ணிய ஜனநாயக போராளிகளையும் அவர்களது அமைப்பையும் வேருடன் அழிப்பதற்கான சூழ்ச்சிகரமான செயற்றிட்டத்தை கூட்டமைப்பினர் நிறைவேற்றியுள்ளனர். இதனூடாக யுத்தம் முடிவுற்றபின்னர் சமூகத்துடன் நிம்மதியாக வாழும் சூழலை பெற்றுக்கொண்ட 12000 இற்கும் மேற்பட்ட முன்னாள் போராளிகளது வாழ்வியலை மீண்டும் நிம்மதியிழக்கவைத்துள்ளனர் என தெரிவித்தார்.

இதனிடையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனைக் கொலை செய்யும் முயற்சியில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்கள் தொடர்புப்பட்டிருப்பர் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த சந்திப்பில் கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக செயலாளர் குமார் உடனிருந்தார்.

SAM_0537

Related posts: