முதலீட்டுத் துறையில் வடமாகாணம் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம்:அமைச்சர் டி.எம். சுவாமிநாதன்!
Tuesday, August 23rd, 2016வடமாகாணம் முதலீட்டுத் துறையில் மிகவும் முக்கியமானதொரு பிராந்தியம். முதலீட்டாளர்கள் இதனை உணர்வார்கள் என நம்புகின்றேன். பல அபிவிருத்தித் திட்டங்கள், கைத்தொழில் முயற்சிகள் என்பன யாழ்ப்பாணத்தில் முன்பொரு காலத்தில் இருந்தன. 30 வருட யுத்தம் காரணமாக அவையனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன என மீள்குடியேற்றம், புனர் வாழ்வு மற்றும் இந்து மத விவகார அமைச்சர் டி.எம். சுவாமி நாதன் தெரிவித்துள்ளார்.
வடமாகாண ஆளுநர் செயலகத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண முதலீட்டாளர்கள் சபையின் எற்பாட்டில் நாட்டின் “தேசிய வளர்ச்சிக்கு வடமாகாணத்தின் முதலீட்டாளர்கள் பங்களிப்பு” எனும் தொனிப்பொருளிலான மகாநாடு இன்று திங்கட்கிழமை(22) யாழ் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தலைமையில் இடம்பெற்றது. இதன் போது கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில் – கடந்த காலப் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களின் வாழ்வாதாரத்தைக் கட்டியெழுப்புதல், போரினால் அழிவடைந்த, சேதமடைந்த வீடுகளை மீளவும் நிர்மாணித்தல் ஆகிய பொறுப்புக்களை ஜனாதிபதி என்னிடம் வழங்கியுள்ளார். வடமாகாணத்தில் முதலீட்டு வாய்ப்புக்களுக்காக விவசாயத் துறை, மீன் பிடித் துறை ஆகிய இரண்டு துறைகளும் முக்கியமான துறைகளாகவுள்ளன. இந்தத் துறைகள் மூலமாக நாம் எவ்வாறு முன்னேறுவது? என்பது தொடர்பில் முதலீட்டாளர்கள் கூடிய கவனம் செலுத்துவது அவசியம். விவசாயத் துறையைப் பொறுத்தவரை நீர்வளம் மிக முக்கிய வளமாகக் காணப்படுகின்றது. ஆகவே, நீர் வளத்தை நாங்கள் பேணிப் பாதுகாக்க வேண்டும். இலங்கை அரசாங்கம் மீன்பிடித் துறையை வடக்கில் முன்னேற்றும் வகையில் துறைமுக வசதிகள் மற்றும் மீன்பிடித் தொழில் நுட்ப வசதிகளை உருவாக்க வேண்டிய தேவையிருக்கிறது என்றார்
Related posts:
|
|