முதலீடுகளை ஊக்குவிப்பதற்கு மின்சாரக் கட்டணம் நிலையானதாகவும் நியாயமானதாகவும் இருப்பது அவசியம் – நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழு தெரிவிப்பு!
Saturday, October 22nd, 2022நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்துவது தொடர்பில் தொழிற்துறைகளை பேணுவதற்கும் முதலீடுகளை ஊக்குவிப்பதற்கும் மின்சார கட்டணத்தை ஏனைய நாடுகளைப் போன்று நிலையானதாகவும் நியாயமான அளவிலும் பேணுவதன் அவசியம் குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உபகுழுவில் புலப்படுத்தப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஒரு தினத்தில் மின்சாரத்துக்கு அதிக கேள்வி மற்றும் குறைந்த கேள்வி உள்ள நேரங்களுக்கிடையில் காணப்படும் பாரிய இடைவெளியை குறைக்க வேண்டும் எனவும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
குறுகிய மற்றும் நடுத்தர கால நிகழ்ச்சித்திட்டங்களை அடையாளம் காண்பதற்கான தேசிய பேரவையின் உப குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ பாட்டலி சம்பிக்க ரணவக்க தலைமையில் நாடாளுமன்றத்தில் (19) கூடிய போதே இந்த விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
நாட்டின் வலுசக்தி தேவையை பூர்த்திசெய்துகொள்ள மாற்று வலுசக்தி மூலங்களை பயன்படுத்துவது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் அது தொடர்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள பல ஆய்வுகள் தொடர்பில் நிபுணர்கள் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
அதேபோன்று, நாட்டின் பொதுப் போக்குவரத்தை வலுப்படுத்துவதற்கு பல்வேறு கருத்துக்கள் முன்வைக்கப்பட்டதுடன் முச்சக்கர வண்டிகள் மற்றும் மோட்டார் சைக்கிள்களுக்கு ஒக்டேன் 87 வகை எரிபொருள் பயன்படுத்துவது தொடர்பிலும் இங்கு கருத்துத் தெரிவிக்கப்பட்டது.
தற்பொழுது நாட்டில் காணப்படும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும்போது மின்சக்தி மற்றும் வலுசக்தித் துறையை மிகவும் வினைத்திறனாகவும் விளைதிறனாகவும் பயன்படுத்திக்கொள்வது தொடர்பாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களையும் யோசனைகளையும் தேசிய பேரவைக்கு முன்வைப்பதாகவும் அதனையடுத்து பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து நிறைவேற்ற முடியும் எனவும் இங்கு தலைவர் குறிப்பிட்டார்.
இலங்கை மின்சார சபையின் முன்னாள் தலைவர் மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் அனுர விஜேபால, மொறட்டுவை பல்கலைக்கழக பேராசிரியர் அமல் குமாரகே, மொறட்டுவை பல்கலைக்கழக கலாநிதி திமந்த டி. சில்வா ஆகியோர் நாட்டில் காணப்படும் மின்சக்தி மற்றும் வலுசக்தி நெருக்கடி தொடர்பிலும் போக்குவரத்தை வினைத்திறனாக்குவது தொடர்பிலும் தமது கருத்துக்களை முன்வைத்தனர்.
நிதி அமைச்சு, திறைசேரி, தேசிய வரவு செலவுத்திட்டத் திணைக்களம், பெற்றோலிய அபிவிருத்தி அதிகார சபை, இலங்கை புகையிரதத் திணைக்களம், இலங்கை போக்குவரத்துச் சபை உள்ளிட்ட பல நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளும் தமது கருத்துக்களை முன்வைத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
|
|