முதலாவது விளையாட்டு பல்கலைகழகத்தை நிர்மாணிப்பதற்கான அனைத்து பணிகளும் பூர்த்தி – அமைச்சர் டளஸ் அழகப்பெரும!

Friday, March 6th, 2020

விளையாட்டு திறமைகளை விருத்தி செய்து சர்வதேச அரங்கில் வெற்றிகளை தனதாக்கி கொள்வதற்காக சிறுவர்களை ஊக்குவிக்கும் நோக்குடன் இலங்கையின் முதலாவது விளையாட்டு பல்கலைகழகம் ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ச மைதான வளாகத்தில் நிர்மாணிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் தயார் நிலையில் உள்ளதாக கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் டளஸ் அழகப்பெரும தெரிவித்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் எண்ணக்கருவின் பிரகாரம் விளையாட்டு அமைச்சின் ஊடாக நவீனமயப்படுத்தப்பட்ட அம்பாறை, செனரத் சோமரத்ன விளையாட்டு அரங்கத்தை மாணவர்களிடம் கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே நேற்று முன்தினம் (04) கல்வி அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு கல்வி அமைச்சர் மேலும் உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்திக்கு விளையாட்டு துறை ஆரோக்கியமான ஒன்றாகும். ஒழுக்கமானதும் ஆரோக்கியமானதுமான சிறார்களை நாட்டுக்கு அர்ப்பனிப்பு செய்வதற்காக விளையாட்டு பொருளாதாரத்தை நாட்டுக்கு அறிமுகம் செய்வது தொடர்பாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கொள்கை பிரகடனத்தில் குறிப்பிட்டுள்ளமை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

இந்நாட்டின் பாடசாலை மாணவர்கள் நீரிழிவு போன்ற தொற்றா நோய்களுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு விளையாட்டு மிகவும் முக்கியமாகும். விசேடமாக பாடசாலையின் முதலாம் தவணை காலத்தின் போது பாடசாலை உள்ளக விளையாட்டு போட்டி, பிக்மெச், கல்வி சுற்றுலா போன்ற வெளிவாரியான செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படுவது சிறுவர்களின் ஆரோக்கியத்தையும் செயற்பாட்டு திறனையும் விருத்தி செய்வதற்காகும். விளையாட்டு போன்ற வெளிவாரியான விடயதானங்களில் மாணவர்கள் ஈடுப்படுவதனை தடுக்க பெற்றோர்கள் ஒருபோதும் முனையக் கூடாது.

பாடங்களை மனனம் செய்து பரீட்சை எழுதும் கலாசாரத்திற்கு பதிலாக செயற்பாடுகளுடன் கூடிய முறைமையின் ஊடாக மாணவர்களின் திறமைகள் மதிப்பீடு செய்யப்படுவதன் காரணமாக பின்லாந்து போன்ற நாடுகள் கல்வி துறையில் பெரும் வளர்ச்சி கண்டுள்ளன என்றார்.

Related posts: