முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக அனைத்து பாடசாலைகளும் நாளை ஆரம்பம் !

Sunday, June 5th, 2022

அரச மற்றும் அரச அனுசரணையின் கீழ் இயங்கும் தனியார் பாடசாலைகளின் கற்றல் நடவடிக்கைகள் நாளைமுதல் மீள ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகளுக்காக இவ்வாறு பாடசாலைகள் மீள திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு இக் காலப்பகுதிக்கான பாடதிட்டங்களை நிறைவு செய்வதற்கு முன்னுரிமை வழங்குமாறு சகல பாடசாலைகளுக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 19 ஆம் திகதி முதலாம் தவணையின் முதலாம் கட்டம் நிறைவு பெற்று பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டிருந்தது.

நாளைமுதல் பாடசாலை கற்றல் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்படுகின்ற போதிலும் தற்போது ஏற்பட்டுள்ள டீசல் தட்டுப்பாடு காரணமாக மாணவர்களுக்கான போக்குவரத்து சேவையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் உள்ள 18,000 தனியார் பேருந்துகளில் 6,000 பேருந்துகள் மாத்திரமே நாளையதினம் சேவையில் ஈடுபடவுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

எனினும் பாடசாலை மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குறித்த பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்டக்கது.

இதனிடையே, கல்வி பொதுத்தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 17 ஆம் திகதிமுதல் 26 ஆம் திகதி வரை முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

106 மத்திய நிலையங்களில் விடைத்தாள் திருத்தப்பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

இரண்டாம் கட்ட விடைத்தாள் திருத்தப் பணிகள் எதிர்வரும் 30 ஆம் திகதி முதல் அடுத்த மாதம் 09 ஆம் திகதி வரை 25 மத்திய நிலையங்களில் முன்னெடுக்கப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் திருத்தப் பணிகளில் சுமார் 40,000 பரீட்சை மதிப்பீட்டாளர்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் திணைக்களம் கூறியுள்ளது.

இதனிடையே, 2021 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை அடுத்த மாத இறுதியில் வௌியிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பிரயோக பரீட்சைகள் நடைபெற்ற பின்னர் பரீட்சை முடிவுகளை வௌியிடவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் L.M.D.தர்மசேன கூறியுள்ளார்.

இதற்கமைவாக, பொறியியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சை எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 17 ஆம் திகதி உயிரியல் தொழில்நுட்ப பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் எதிர்வரும் 29 ஆம் திகதி மனைப் பொருளியல் பாடநெறிக்கான பிரயோக பரீட்சையும் நடைபெறவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

000

Related posts: