முடிவுக்கு வந்தது யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் நிர்வாக முடக்கல் போராட்டம் 

Monday, November 6th, 2017

அரசியல் கைதிகளுக்கு ஆதரவாக  யாழ். பல்கலைக்கழகச் சமூகம் முன்னெடுத்து வந்த காலவரையற்ற நிர்வாக முடக்கல் போராட்டம் இன்று திங்கட்கிழமை(06) கைவிடப்பட்டுள்ளது. எனினும், அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகத் தாம் ஆரம்பித்த வகுப்புப் பகிஷ்கரிப்புப் போராட்டம் தொடருமென யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

வவுனியா மேல்நீதிமன்றத்திலிருந்து அனுராதபுரம் விசேட நீதிமன்றத்திற்குத் தமது வழக்குகள் மாற்றப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மூன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கு ஆதரவாகவும்,  அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தியும் யாழ். பல்கலைக்கழகச் சமூகம் காலவரையற்ற நிர்வாக முடக்கல் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர். ஆயினும், அவர் வாக்குறுதி வழங்கிப் பல நாட்கள் கடந்தும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படாத காரணத்தால் விரக்தியுற்ற பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக சமூகத்துடன் இணைந்து கடந்த-30 ஆம் திகதி தொடக்கம் காலவரையற்ற நிர்வாக முடக்கல் போராட்டத்தை ஆரம்பித்திருந்தனர்.
இதன் காரணமாகப் பல்கலைக்கழகத்தின் அனைத்துக் கல்விசார், கல்விசாராச் செயற்பாடுகளும் கடந்த ஒரு வார காலமாகத் தடைப்பட்டிருந்தன.
இந் நிலையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த அரசியல் கைதிகள் தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பாக ஆராய்வதற்காக  வட-கிழக்கிலுள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. எனினும், இந்த அழைப்பினை ஏற்றுக் கலந்து கொண்ட ஒரு சில அரசியல் வாதிகளுக்கும், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்குமிடையே கடந்த-03 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் யாழ். பல்கலைக்கழகத்தில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றது.
குறித்த கலந்துரையாடலில் கலந்து கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாகாண  சபை  உறுப்பினர்களும் அரசியல் கைதிகள் தொடர்பாக வழங்கிய உறுதிமொழிகளின் அடிப்படையில் அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல் கைதிகளின் போராட்டத்தைத் தற்காலிகமாகக் கைவிடுவதற்குக் கோர முடிவு செய்யப்பட்டது.
இதன் பிரகாரம் கடந்த சனிக்கிழமை யாழ். பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் மற்றும் அரசியல் வாதிகள் அனுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்று அரசியல் வாதிகள் வழங்கிய உறுதிமொழிகளை எடுத்துக் கூறியதுடன் பானங்களை வழங்கி அரசியல் கைதிகள் மூவரினதும் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தற்காலிகமாக முடிவுக்குக் கொண்டு வந்தனர்.
அனுராதபுரம் சிறைச்சாலையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மூன்று அரசியல் கைதிகளினதும் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாகக் கைவிடப்பட்டதன் எதிரொலியாகவே நிர்வாக முடக்கல் போராட்டத்தைக் கைவிடுவதாக மாணவர்கள் இன்று தெரிவித்துள்ளனர்.

Related posts: