முடிந்தவரை வீட்டில் இருங்கள் – சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் நிலைமை மோசமடையயும் என சுகாதார பகுதியினர் எச்சரிக்கை!

Saturday, November 6th, 2021

கடந்த இரண்டு மூன்று நாட்களில் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு கொவிட் தொற்று ஏற்படும் போக்கு சற்று அதிகரித்து காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்..

அண்மைய நாட்களில் கொவிட் தொற்றுக்குள்ளான கர்ப்பிணித் தாய்மார்களின் எண்ணிக்கை 65-75 ஆக இருந்ததாகவும், அது கடந்த சில தினங்களில் 100 ஆக அதிகரித்துள்ளதாகவும் திருமதி சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இருப்பினும், 95% க்கும் அதிகமான கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொவிட் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.

“கடந்த இரண்டு அல்லது மூன்று நாட்களில் நாங்கள் கொஞ்சம் அதிகரிப்பதைக் கண்டோம், முடிந்தவரை வெளியில் செல்லாமல் வீட்டில் இருங்கள், ”என்று அவர் கூறினார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களிடமும் கொவிட்-19 பாதிப்பு அதிகரித்து வருவதாக விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கடந்த நாட்களுடன் ஒப்பிடுகையில் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

மேலும் நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முறையான சுகாதார நடைமுறைகளை பின்பற்றாததே முக்கிய காரணம் என தெரிவித்தார்.

அத்துடன் “பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு பொருளாதார நடவடிக்கைகள் அனுமதிக்கப்பட்டால், இந்த சுகாதார நடைமுறைகள் தவிர்க்கப்பட்டால் எதிர்காலத்தில் இந்த நிலைமை மோசமடைய வாய்ப்புள்ளது எனவும் அவர் எச்சரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: