முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப்பட மாட்டாது – துறைமுக சேவைகள் சார் தொழிற்சங்கம் அரசாங்கத்திடம் உறுதி!
Sunday, March 26th, 2023துறைமுக அதிகார சபையின் கீழ் பணி புரியும் இழுவை படகு மற்றும் சிறிய கப்பல் செலுத்துநர்களின் சங்க அதிகாரிகள் துறைமுக சேவைகள் முடங்குவதற்கு இனியொரு போதும் இடமளிக்கப் போவதில்லை என அரசாங்கத்திடம் உறுதியளித்துள்ளனர்.
ஜனாதிபதி அலுவலக பிரதானி சாகல ரத்நாயக்க தலைமையில், கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேராவின் பங்கேற்புடன் இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர்கள் இவ்வாறு உறுதியளித்துள்ளனர்.
கொழும்பு துறைமுகம் உள்ளிட்ட நாட்டின் ஏனைய துறைமுகங்களுக்கும் வருகை தரும் பெரும்பாலான கப்பல்கள் துறைமுகங்களின் முனையங்களுக்கு அழைத்துச் செல்லப்படுகின்றமை மேற்கூறப்பட்ட சிறிய கப்பல்களினாலேயே முன்னெடுக்கப்படுகின்றன.
மேலும், வெளித் துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கப்பல்களின் கெப்டன்கள் மற்றும் பணியாளர்கள் சிறிய கப்பல்கள் மூலமே அழைத்து வரப்படுகின்றனர்.
கடந்த 15 ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தில் இந்த தொழிற்சங்கமும் கலந்துகொண்டமையால், அதன் பணிகள் கடற்படையினராலேயே முன்னெடுக்கப்பட்டன.
பின்னர் அவர்கள் மீண்டும் சேவைக்கு சமுகமளித்ததையடுத்து, சாகல ரத்நாயக்க தொழிற்சங்கத்தினரை அழைத்து கலந்துரையாடியிருந்தார்.
இதன்போது வேலை நிறுத்தத்தினால் அரசாங்கத்துக்கு ஏற்பட்ட அசௌகரியத்துக்கு அவர்கள் கவலை வெளியிட்டனர்.
அதனைத் தொடர்ந்து, தமது பிரச்சினைகள் தொடர்பில் கலந்துரையாடினர். தற்போது நிதி பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வினை வழங்க முடியாது என இதன்போது சுட்டிக்காட்டிய சாகல ரத்நாயக்க, மீண்டும் இந்த சேவைகள் முடங்கினால் அரசாங்கம் மாற்று வழியை நாடும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
|
|