முடக்க நிலை தளர்த்தப்பட்டாலும் நாளாந்தம் 9 மணி நேர ஊரடங்கு சட்டம் நடைமுறையில் இருக்கும் – ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவிப்பு!

Monday, May 11th, 2020

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய மாவட்டங்கள் அனைத்திற்குமான ஊரடங்கு உத்தரவு இன்று அதிகாலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டுள்ளது.

அத்துடன் குறித்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை நாளாந்தம் முன்னிரவு  8.00 மணி தொடக்கம் அதிகாலை 5.00 மணிவரை மாத்திரம் ஊரடங்கு உத்தரவு அமுலில் இருக்குமெனவும் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, வாராந்த மற்றும் நாளாந்த சந்தைகள், உடற்பயிற்சி நிலையங்கள், சனசமூக நிலையங்கள், சிற்றுண்டிசாலைகள் என்பனவற்றை இன்றுமுதல் திறப்பதற்கு அனுமதி வழங்கப்பட மாட்டாது என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளுக்கு அமைய, தனியார் சுகாதார மையங்கள் இன்றுமுதல் திறக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிகையலங்காரம் மற்றும் முடிதிருத்தும் நிலையங்களை திறப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதற்காக அந்தந்த பகுதிகளில் உள்ள சுகாதார மருத்துவ அதிகாரியிடம் அனுமதியை பெற்று அதன்படி செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என பிரதி காவல்துறைமா அதிபர் அஜித் ரோஹண அறிவுறுத்தியுள்ளார்.

இதேவேளை, அனைத்து அதிவேக நெடுஞ்சாலைகளும் இன்று காலை 7 மணிமுதல் திறக்கப்பட்டுள்ளது என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

அத்துடன் தெற்கு அதிவேக வீதி கடந்த வாரம்முதல் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மற்றும் வெளிச்சுறுவட்ட நெடுஞ்சாலைகள் என்பன இன்றையதினம் திறக்கப்பட்டன.

தொழிலுக்காக செல்லும் அரச மற்றும் தனியார்துறை ஊழியர்கள் அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இததனிடையே, தேசிய அடையாள அட்டையின் ஒன்று மற்றும் இரண்டு ஆகிய இறுதி இலக்கத்தை கொண்டவர்கள் இன்றையதினம் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளியேற முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களிலே இந்த முறைமை நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, எதிர்வரும் 2 வாரக்காலப்பகுதிக்கு பொதுமக்களுக்கான பொதுபோக்குவரத்தினை பயன்படுத்த அனுமதி வழங்க வேண்டாம் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட மருத்துவர் அனில் ஜாசிங்க போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீரவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related posts: