முடக்கல் நிலையால் சாதகமான விளைவுகள் – சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் சுட்டிக்காட்டு!

Thursday, September 9th, 2021

முடக்கல் நிலை காரணமாக சாதகமான விளைவுகள் ஏற்பட்டுள்ளன என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார்.

பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை சில வாரங்களிற்கு முன்னர் 5 ஆயிரத்தை நெருங்கியது என தெரிவித்துள்ள அவர் தற்போது 3 ஆயிரத்துக்கும் குறைவாக காணப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாளாந்தம் 5 ஆயிரம் நோயாளிகள் அடையாளம் காணப்பட்டால் அது மருத்துவதுறை மீது ஏற்படுத்தும் தாக்கத்தை உங்களால் உணரமுடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலக்கை அடைவது சுலபம். ஆனால் பெற்றுக்கொண்ட பலாபலன்களை தக்கவைப்பதற்கு அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசமற்றும் தனியார் துறையினரிடம் 264 நிலையங்களில் கொவிட் 19 நோயாளிகளிற்கு சிகிச்சை அளிப்பதற்கு 39 ஆயிரத்து 222 கட்டில்கள் உள்ளன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதில் 70 வீதமான கட்டில்கள் தற்போது நிரம்பிவிட்டன,ஆனால் சில வாரங்களிற்கு முன்னர் 90 வீதம் நிரம்பியிருந்தது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

சில வாரங்களிற்கு முன்னர் ஆயிரத்து 4 நோயாளிகளிற்கு ஒக்சிசன் தேவைப்பட்டது, தற்போது இந்த எண்ணிக்கை 802 ஆக குறைவடைந்துள்ளது என மருத்துவ தொழில்நுட்ப சேவைகள் இயக்குநர் அன்வர் ஹம்தானி ஆனால் நாங்கள் தற்போது முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளை நிறுத்தினால் தற்போதைய நிலை தொடரும் என நாங்கள் கருதக்கூடாது எனவும் தெரிவித்த அவர் பிசிஆர் அன்டிஜென் சோதனைகள் குறைக்கப்பட்டுள்ள போதிலும் ஆபத்தான பகுதியில் கொரோனா ஆபத்துள்ளவர்கள் என கருதப்படுபவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர், அபிவிருத்தியடைந்த நாடுகள் கூட சோதனைகளை நிறுத்திவிட்டன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை குறைவடையாததை சுட்டிக்காட்டியுள்ள அவர் முடக்கல் நிலையின் சாதகமான விளைவுகள் உயிரிழப்புகளில் பிரதிபலிக்கவில்லை, சில நாட்கள் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்ட பின்னரே ஒருவர் உயிரிழக்கின்றார் எனவும் தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் தடுப்பூசிகள் அதிகரிப்பதால் சில வாரங்களில் உயிரிழப்புகள் குறைவடையும் எனவும் அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: