முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் திட்டம் பெப்ரவரி 01 முதல் ஆரம்பம் – அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் அறிவிப்பு!

Friday, January 28th, 2022

பெப்ரவரி முதலாம் திகதிமுதல் முச்சக்கர வண்டிகளில் கட்டண மீற்றர் பொருத்தும் வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அளவீட்டு அலகுகள், நியமங்கள் மற்றும் சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

1995 ஆம் ஆண்டின் 35 ஆம் இலக்க அளவீட்டு அலகுகள், தரநிலைகள் மற்றும் சேவைகள் சட்டத்தின் விதிகளின்படி, ரக்ஸி கட்டண மீற்றர்களை இறக்குமதி செய்வதற்கும், உற்பத்தி செய்வதற்கும் அல்லது விற்பனை செய்வதற்கும் முன்அனுமதி பெறப்பட வேண்டும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

எனவே, உரிமம் இல்லாத விற்பனையாளர்களிடம் கட்டண மீற்றரை கொள்வனவு செய்ய வேண்டாம் எனவும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

நடமாடும் ரக்ஸி மீற்றர் சேவை மையங்களை அமைப்பதற்கும், பிரதேச செயலக மட்டத்தில் கட்டண மீற்றர்களை சரிபார்க்க அங்கீகரிக்கப்பட்ட ரக்ஸி மீற்றர்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதற்கும் அளவீடுகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.

முதற்கட்டமாக மேல் மாகாணத்தில் இத்திட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் மேல் மாகாணத்திலுள்ள அனைத்துப் பிரதேச செயலகங்களிலும் காலை 9.30 மணிமுதல் மாலை 4.00 மணிவரை இந்த நிலையங்களை நடத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: