முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து!

Saturday, March 10th, 2018

முகமாலையில் கண்ணிவெடிகள் அகற்றப்படாத பகுதிகளில் சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபடுவோரால் பொது மக்களுக்கு ஆபத்து என கண்ணிவெடி அகற்றும் தொண்டு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இதுதொடர்பில் தொண்டு நிறுவன அதிகாரிகள் தெரிவித்ததாவது: முகமாலையில் சில பகுதிகளில் இன்னும் கண்ணிவெடிகள் அகற்றப்படவில்லை. அந்தப் பகுதிகளில் இரவுவேளையில் சட்டவிரோதமாக மணல் அகழ்வுகள் இடம்பெறுகின்றன. அங்கு அள்ளப்படும் மணலை கண்ணிவெடிகள் அகற்றப்பட்ட பகுதிகளுக்குக் கொண்டு வந்து, அதற்குள் இருக்கும் வெடிபொருள்களை எடுத்து வீசுகின்றனர். அத்துடன், வெடிபொருள்களுடனும் மணலை எடுத்துச் செல்கின்றனர்.

இவ்வாறு சட்டவிரோத மணல் அகழ்வுகளில் ஈடுபடுவோரால், கண்ணிவெடி அகற்றப்பட்ட பகுதிகளில் வீசப்படும் வெடிபொருள்களால் பொது மக்களுக்கு ஆபத்து ஏற்படும். அத்துடன், வெடிபொருள்களுடன் அவர்கள் எடுத்துச் செல்லும் மணல், பொது மக்களுக்கே விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றாலும் பொது மக்களுக்கே ஆபத்து ஏற்படும்.

எனவே இந்த சட்டவிரோத செயற்பாடுகளைத் தடுக்க பொலிஸார் மற்றும் உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். அத்துடன், பொது மக்களும் விழிப்புடன் இருக்கவேண்டும் – என்றனர்.

Related posts: